திருக்குறள் - 594     அதிகாரம்: 
| Adhikaram: ookkamutaimai

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

குறள் 594 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aakkam adharvinaaich sellum asaivilaa" Thirukkural 594 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும். நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும். (அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆக்கம்-செல்வம்; அசைவு இலா ஊக்கம் உடையான் உழை-தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு; அதர்வினாய்ச் செல்லும்- தானாகவே வழி வினவிக்கொண்டு செல்லும். ஊக்க முள்ளவனுக்கு ஆக்கம் எளிதாய்க்கிட்டும் என்பது கருத்து. அசைவின்மை இடுக்கண், மெய்வருத்தம் முதலிய வற்றால் தளராமை. இந்நான்கு குறளாலும், இருக்கின்ற செல்வத்தினும் அதற்கு ஏதுவான ஊக்கம் சிறந்த தென்பது கூறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அசைவில்லாத ஊக்கத்தினை உடையவன் இருக்கும் இடத்திற்குப் பொருள் தானே வழிதேடிக்கொண்டு போகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பயனுள்ள செயல்கள் வீனாகாமல் நடக்கும், தளராத ஊக்கத்தை உரிமையாக அடைந்த ஒருவர் இடத்தில்.

Thirukkural in English - English Couplet:


The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Wealth will find its own way to the man of unfailing energy.

ThiruKural Transliteration:


aakkam adharvinaaich sellum asaivilaa
ookka mudaiyaa nuzhai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore