ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்.
Transliteration
aakkam izhandhaemendru allaavaar ookkam
oruvandham kaiththutai yaar.
🌐 English Translation
English Couplet
'Lost is our wealth,' they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.
Explanation
They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property".
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.
2 மணக்குடவர்
செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார். இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.
3 பரிமேலழகர்
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - இழந்தாராயினும் யாம் கைப்பொருளை இழந்தேம் என்று அலமரார்; ஒருவந்தம் ஊக்கம் கைத்து உடையார் - நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார். ('ஆக்கம்' ஆகுபெயர். ஒருவந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: 'கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி.19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார் - ஊக்கத்தை நிலையாகக் கைப்பொருளாகக் கொண்டவர் ; ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - தம் செல்வத்தை யிழந்தாராயினும் அதை யிழந்தேம் என்று துன்புறார். ஊக்கத்தினால் வேறு பொருள் புதிதாகத்தேடிக் கொள்ளலா மாதலின் , 'அல்லாவார்' என்றார் . ஒருவந்தம் நிலைபேறு. அது இங்கு நிலைபேறாக என்று பொருள் படுதலாற் குறிப்பு வினையெச்சம். பெயரெச்சமாயின் ஒருவந்தக் கைத்து என ஈறுகெட்டுப் புணர்ந்திருக்கும். கையிலுள்ள பொருள் கைத்து . கையது - கைத்து (கை+து). ஆக்கத்தை உண்டாக்குவது ஆக்கம்; ஆகுபெயர்.ஆதல் வளர்தல், மேம்படுதல். ஆ-ஆகு-ஆக்கம். செல்வம் நிலையான கைத்தன்மை. 'கைத்துண்டாம் போழ்தே கரவாதறஞ் செய்ம்மின் '(நாலடி.19) என்பதனால் அறியப்படும்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
நிலைபெற்ற ஊக்கத்தினைக் கைப்பொருளாகக் கொண்டவர்கள் இழந்தாராயினும், கைப்பொருளை இழந்தோம் என்று மனம் வருந்த மாட்டார்கள்.
6 சாலமன் பாப்பையா
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.
7 கலைஞர் மு.கருணாநிதி
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
8 சிவயோகி சிவக்குமார்
பயன் அற்றுப் போனதே என்று தன்நிலை இழக்க மாட்டார் ஊக்கத்தை ஒருவர் தனது கைத்துணையாய் வைத்துக்கொண்டால்.
More Kurals from ஊக்கமுடைமை
அதிகாரம் 60: Kurals 591 - 600