"aakkam karudhi mudhalizhakkum seyvinai ookkaar arivutai yaar" Thirukkural 463 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார். இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை, அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார். ('கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினை' என்றார்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - உறுதியற்ற எதிர்கால வூதியத்தை நோக்கி இருப்பிலுள்ள முதலையும் இழத்தற்கேதுவான முயற்சியை; அறிவு உடையார் ஊக்கார் - அறிவுடையோர் மேற்கொள்ளார். ஊதியத்தையன்றி முதலையும் இழக்கும் செய்வினை, வலியுங் காலமும் இடமு மறியாது பிறன் நாட்டைக் கைப்பற்றச் சென்றுதன் நாட்டையும் இழத்தல் போல்வது. 'செய்வினை' செய்தறிந்த வினை அல்லது செய்யத் தொடங்கிய வினை. பின்னைப் பொருட்கு ஊக்குதல் மேலுஞ் செய்யத்துணிதல். எச்ச வும்மை செய்யுளால் தொக்கது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
பின்பு வரக்கூடிய ஊதியத்தினைக் கருதி முன்பு பெற்றுள்ள முதலையும் இழப்பதற்குக் காரணமான தொழிலினை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
வரவை எண்ணி மூலப் பொருளை இழக்கும் செயலை செய்ய தூண்ட மாட்டார் அறிவுடையவர்.
Thirukkural in English - English Couplet:
To risk one's all and lose, aiming at added gain,
Is rash affair, from which the wise abstain.
ThirukKural English Meaning - Couplet -Translation:
The Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.
ThiruKural Transliteration:
aakkam karudhi mudhalizhakkum seyvinai
ookkaar aRivutai yaar.