ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி.
Transliteration
aaLvinaiyum aandra aRivum ena-iraNtin
neeLvinaiyaal neeLum kuti.
🌐 English Translation
English Couplet
The manly act and knowledge full, when these combine
In deed prolonged, then lengthens out the race's line.
Explanation
One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
2 மணக்குடவர்
முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.
3 பரிமேலழகர்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் - முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயாலல்; குடி நீளும் - ஒருவன் குடி உயரும். (நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான்-முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்படும் இரண்டினையுமுடைய இடையறாத செயலால்; குடிநீளும்-ஒருவனது குடி உயரும். ஆள்வினை ஆண்டு நடத்துஞ் செயல். ஆனுதல்-நிறைதல். அறிவுநிறைதலாவது இயற்கை யறிவோடு செயற்கையறிவுஞ் சேர்தல். ஆள்வினை சோம்பலை நீக்கற்கும் ஆன்றவறிவு வெற்றிபெறச் சூழ்தற்கும் வேண்டியனவாம். ’நீள்வினை’ விடாமுயற்சி. குடிநீள்தல் தொடர்தலும் உயர்தலும்.
5 சாலமன் பாப்பையா
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.
7 சிவயோகி சிவக்குமார்
ஆழமான செயல்திறனும், ஆழ்ந்த அறிவும் என இரண்டின் தெடர்ச் செயலால் வளரும் வாழ்வு.
8 புலியூர்க் கேசிகன்
‘முயற்சியும், நிறைந்த அறிவும்’ என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய, இடைவிடாத கருமச் செயலால், ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும்.
More Kurals from குடிசெயல்வகை
அதிகாரம் 103: Kurals 1021 - 1030