திருக்குறள் - 493     அதிகாரம்: 
| Adhikaram: itanaridhal

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

குறள் 493 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aatraarum aatri adupa idanarindhu" Thirukkural 493 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர், இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின். ('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இடன் அறிந்து போற்றி - தக்க இடத்தைத்தெரிந்து தம்மைக் காத்துக் கொண்டு , போற்றார்கண் செயின் - பகைவரொடு போர்வினை செய்வராயின் ; ஆற்றாரும் ஆற்றி அடுப - வலிமையில்லாதவரும் வலிமையராகி வெல்வர் . தம்மைக் காத்தல் , பகைவரால் , துன்பம் தோல்வி கேடுகள் வராமல் அரணாலும் படையாலும் தம்மைக் காத்துக் கொள்ளுதல் . தம்மை என்பதும் போர்வினை என்பதும் அவாய் நிலையான் வந்தன . உம்மை இழிவு சிறப்பு .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


வலிமை இல்லாதவர்களும் வலிமையுடையவராகி வெல்லுவார்கள். எப்போது என்றால், அதற்குத் தகுந்த இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடம் வினைகளைச் செய்வார்களானால் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வழியற்றவரும் வழி கிடைத்து நல்ல இடம் அமர்ந்தால் வாழ்த்தாதவரும் வாழ்த்தும் வாய்ப்பை பெறுவார்.

Thirukkural in English - English Couplet:


E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.

ThiruKural Transliteration:


aatraarum aatri adupa idanaRindhu
poatraarkaN poatrich seyin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore