திருக்குறள் - 725     அதிகாரம்: 
| Adhikaram: avaiyanjaamai

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

குறள் 725 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aatrin alavarindhu karka avaiyanjaa maatrang kotuththar poruttuaatrin alavarindhu karka avaiyanjaa" Thirukkural 725 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு-வேற்றரசர் அவையிடத்து அவர் வினாவியதற்கு விடையும் சொன்னதற்கு மறுமொழியும் அஞ்சாது சொல்லுதற் பொருட்டு; ஆற்றின் அளவு அறிந்து கற்க-முறைப்படி அளவை நூலைத் தெளியக் கற்க. அமைச்சர்க்குத் தம் அரசரின் அவையிடத்துப் பொதுவாகவும் இயல்பாகவும் அச்சமிராதாகையாலும், பெரும்பாலும் தம் சூழ்வினைகளை அரசரோடேயே நிகழ்த்துவராதலாலும், இங்கு வேற்றரசர் அவையெனக் கூறப்பட்டது. முறைப்படி கற்றலாவது இலக்கணநூல் கற்ற பின்னரே அளவை நூலைக் கற்றல். அளவென்றது நான்கு முதற் பத்து வகையாகச் சொல்லப்பெறும் அளவை வகைகளை. அவை முன்னரே கூறப்பட்டன. காட்சியுங் கருத்துமாகிய இருவகைப் பொருள்களின் இயல்பையும் அளந்தறிதற்குக் கருவியாகவுள்ள நெறிமுறைகளை, அளவையென்றது தொழிலாகுபெயர். அளவைநூல் தருக்கநூலென்றும் ஏரணநூலென்றும் பெயர்பெறும். அது சிறப்பு (வைசேடிகம்) முறை (நியாயம்) என இரு திறப்படும். இவையிரண்டும், முறையே கணாத முனிவராலும் அக்கபாதரென்னும் கோதம முனிவராலும் இயற்றப்பட்ட ஆரிய முதனூல்களாக இன்று சொல்லப்படினும், இவற்றுள் முன்னது தமிழர் கண்டதென்றும், அது ஏரணம் என்றே பெயர் பெறுமென்றும், பின்னதே அதன் வழிப்பட்ட ஆரியநூலென்றும், அறிதல் வேண்டும். சிறப்பென்னும் வைசேடிகத்திற்குத் தமிழ் ஏரணமே முதனூலென்பதை, அகத்தியத் தருக்க நுற்பாக்களை நோக்கிக் காண்க. அறிந்துகற்றலாவது, நேர்நெறிப்பட்ட தருக்க உறழ்களோடு. (வாதங்களோடு), கோணைநெறிப்பட்ட விசியுழி(செற்பம்), ஒட்டாரம்(விதண்டை), திரிப்பு (சலம்) முதலிய உறழ்களையும் ஆய்ந்தறிதல். இவ்விருகுறளாலும் அவையஞ்சாதார் செய்யவேண்டிய செயல் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எடுத்துக் கொண்ட பொருளின் அளவை அறிந்து கற்க வேண்டும். அதன்பொருட்டே அவைக்கு அஞ்சாமலும், மாற்றுக் கருத்துக்கு ஈடுகொடுத்தும் பேச முடியும்.

Thirukkural in English - English Couplet:


By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.

ThirukKural English Meaning - Couplet -Translation:


In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).

ThiruKural Transliteration:


aatrin aLavaRindhu kaRka avaiyanjaa
maatranG kotuththaR poruttu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore