ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.
Transliteration
aatruvaar aatral ikazhaamai poatruvaar
poatraluL ellaam thalai.
🌐 English Translation
English Couplet
The chiefest care of those who guard themselves from ill,
Is not to slight the powers of those who work their mighty will.
Explanation
Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
2 மணக்குடவர்
தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.
3 பரிமேலழகர்
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது. (ஆற்றல் என்பது பெருமை,அறிவு,முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொதுவகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்ட வினை முயற்சிகளை யெல்லாம் வெற்றியாக முடிக்கவல்லவரின் வல்லமையைத் தாழ்வாக மதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தமக்குக் கேடுவராமற் காத்துக் கொள்வார் செய்யுங் காவல்க ளெல்லாவற்றுள்ளும் தலைமையானதாம். 'ஆற்றல்' என்பது ஆக்கத்திற்கும் அழித்தற்கும் ஏதுவான பல்வகை வலிமைகள். இகழ்ந்தவிடத்து அழித்துவிடுவார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், படை,அரண்,நட்பு முதலிய பிறகாவல்கள் அழிக்கப்பட்டு விடுமாதலின் 'தலை' என்றும், கூறினார். இதனால் பெரியாரைப் பிழையாமையின் இன்றியமையாமை கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.
7 சிவயோகி சிவக்குமார்
வழிநடத்துபவரின் ஆற்றலை இகழாது இருப்பதே நன்மைகளை போற்றபவர் போற்றலுக்கு எல்லாம் முதன்மையானது.
8 புலியூர்க் கேசிகன்
மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது; அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம், மிகச் சிறந்தது ஆகும்
More Kurals from பெரியாரைப் பிழையாமை
அதிகாரம் 90: Kurals 891 - 900
Related Topics
Because you're reading about Not Offending the Great