Kural 1075

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

achchamae keezhkaLadhu aasaaram echcham
avaavuNdael uNtaam siRidhu.

🌐 English Translation

English Couplet

Fear is the base man's virtue; if that fail,
Intense desire some little may avail.

Explanation

(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

2 மணக்குடவர்

கயவர் ஆசாரமுடையராதற்குக் காரணம் அச்சமே: அஃதொழிய ஒருபொருள்மேல் ஆசையுடையராயின் அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம். இஃது இயல்பான ஒழுக்கம் இலரென்றது.

3 பரிமேலழகர்

கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம். (ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு, ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கீழ்களது ஆசாரம் அச்சமே - கீழ்மக்களது ஒழுக்கமெல்லாம் தீயொழுக்கங் கண்டுபிடிக்கப்படின் அரசனால் தண்டனைவரும் என்று அஞ்சும் அச்சத்தினால் ஏற்படுவதே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அச்சமில்லாத வழியில், தம்மால் விரும்பப்படும் பயன் விளையுமாயின் அதனாற் சிறிது ஒழுக்கமுண்டாம். கீழ்மக்களின் ஒழுக்கம் பெரும்பாலும் அச்சமும் சிறுபான்மை தன்னலமும் பற்றியன்றி, இயல்பாக ஏற்படாதென்பதாம். ஆசாரத்தின் கரணியத்தை ' ஆசாரம் ' என்றும், அவாப்படுவதை 'அவா' என்றும், சார்த்திக் கூறினார். 'கீழ்கள்' ஆகுபெயர். ' எச்சம் ' இடப்பொருளுருபு தொக்கது.

5 சாலமன் பாப்பையா

கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

அச்சமுடன் இருப்பதே கீழ் மக்களின் விடாது கடைபிடிக்கும் ஆசாரம். ஆசைப்பட்டால் எஞ்சிய சிறிது ஒழுக்கம் காணப்படும்.

8 புலியூர்க் கேசிகன்

‘அரசரால் துன்பம் வரும்’ என்னும் அச்சமும் கீழ்மக்களது ஆசாரத்துக்குக் காரணம்; அ·து ஒழிந்தால், விரும்பப்படும் பொருள் வரும் போது, சிறிது உண்டாகும்.

More Kurals from கயமை

அதிகாரம் 108: Kurals 1071 - 1080

Related Topics

Because you're reading about Baseness

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature