Kural 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

adakkam amararuL uykkum adangaamai
aariruL uyththu vidum.

🌐 English Translation

English Couplet

Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.

Explanation

Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

9 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

2 மணக்குடவர்

மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.

3 பரிமேலழகர்

[அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம்போல் தம் குற்றமும் காணும்(குறள்.190) நடுவுநிலைமை உடையார்க்கு ஆகலின், இது நடுவு நிலைமையின்பின் வைக்கப்பட்டது.) அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.).

4 ஞா. தேவநேயப் பாவாணர்

அடக்கம் அமரருள் உய்க்கும் - அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கரிய இருளுலகத்திற்குச் செலுத்திவிடும். இருள் என்றது இருளுலகத்தை. இருளுலகமாவது நரகம். : "இருளுலகஞ் சேராதவாறு" என்று நல்லாதனார் ( திரிகடுகம் , 90) கூறுதல் காண்க. பண்டைக் காலத்தில் இருட்டறையுள் அடைப்பதும் ஒருவகைத் தண்டனையாயிருந்தமையின், நரகம் இருளுலகம் எனப்பட்டது. ஆர் இருள் என்பது திணிந்த இருள் என்றுமாம். விடு என்பது விரைவும் நிறைவும் உணர்த்தும் துணை வினைச்சொல்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

அடக்கமாகிய அறம் ஒருவனை அமரர்கள் உலகில் கொண்டு செலுத்தும். அடக்கமில்லாத தீய குணம் பொறுத்தற்கரிய (இருண்ட) துன்ப உலகில் செலுத்தும்.

6 சாலமன் பாப்பையா

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

8 சிவயோகி சிவக்குமார்

பணிவு தெயவீகமானவர்களுடன் சேர்க்கும் பணிவற்ற தன்மை மீளமுடியாத இருட்டில் சேர்த்து விடும்.

9 புலியூர்க் கேசிகன்

அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும்; அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும்.

More Kurals from அடக்கமுடைமை

அதிகாரம் 13: Kurals 121 - 130

Related Topics

Because you're reading about Self-Control

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature