திருக்குறள் - 1     அதிகாரம்: 
| Adhikaram: katavul vaazhththu

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

குறள் 1 - திருவள்ளுவர் - ThiruValluvar

"agara mudhala ezhuththellaam aadhi" Thirukkural 1 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசன் விளக்கம்: - Thirukkural Meaning in Tamil


எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர்: - Thirukkural Meaning in Tamil


எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது. இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க. பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ். பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக் குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது. இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே. ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க. ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம். ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு,

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளிவடிவான 'அகர'மாகிய முதலை உடையன. அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.

சாலமன் பாப்பையா விளக்கம்: - Thirukkural Meaning in Tamil


எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்: - Thirukkural Meaning in Tamil


அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல ஆதியில் பகுக்க முடியாத வானம் (பகவான்) முதலாக கொண்டது இந்த உலகம் .

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.

Thirukkural in English - English Couplet:


A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains

ThirukKural English Meaning - Couplet -Translation:


As the letter A is the first of all letters, so the eternal God is first in the world

ThiruKural Transliteration:


agara Mudhala ezhuththellaam aadhi
Pakavan Mudhatre ulaku

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore