அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார்.
Transliteration
akataaraar allal uzhapparsoo thennum
mukatiyaan mootappat taar.
🌐 English Translation
English Couplet
Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil,
They suffer grievous want, and sorrows sore bewail.
Explanation
Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.
2 மணக்குடவர்
தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார். மறைத்தல்- நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.
3 பரிமேலழகர்
சூது என்னும் முகடியான் மூடப்பட்டார் - தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர். (செல்வங்கெடுத்து நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகளை நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
சூது என்னும் முகடியான் முடப்பட்டார் - சூதாட்டு என்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர்; அகடு, ஆரார் அல்லல் உழப்பர் - இம்மையில் வயிறார உண்ணப்பெறார்;மறுமையில் நரகத்துன்பத்தால் வருந்துவர். பொருளீட்டும் முயற்சியைக் கெடுத்து வறுமையைக் கொடுத்தலால் 'முகடி' யென்றும், புதிதாகப் பொருளீட்டாது பழம் பொருளையும் பணையமாக வைத்திழத்தலால் 'அகடாரார்' என்றும், பொய்யும் வஞ்சனையும் களவும் பழகுதலால் 'அல்லலுழப்பர்' என்றும், கூறினார், வயிறு நிரம்பாமை சொல்லவே, பிற புலன் நுகர்ச்சியில்லாமை சொல்லாமலே பெறப்படும், வீட்டு முகட்டு வளையில் தங்குகின்றவள் என்னும் கருத்துப்பற்றி முகடியென்னப்பட்டாள் போலும்!
5 சாலமன் பாப்பையா
சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.
6 கலைஞர் மு.கருணாநிதி
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.
7 சிவயோகி சிவக்குமார்
அகநிறைவு அடையாமல் துன்பத்தில் நிலைப்பார்கள் சூது என்ற முட்டாள்தனத்தில் முழ்கியவர்கள்.
8 புலியூர்க் கேசிகன்
சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள்.
More Kurals from சூது
அதிகாரம் 94: Kurals 931 - 940
Related Topics
Because you're reading about Gambling