திருக்குறள் - 1141     அதிகாரம்: 
| Adhikaram: alararivuruththal

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

குறள் 1141 - திருவள்ளுவர் - ThiruValluvar

"alarezha aaruyir nirkum adhanaip" Thirukkural 1141 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும். அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார், இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர் கூறுகின்ற அலர் தனக்காகின்றவற்றைத் தோழிக்கு அறிவுறுத்தலும் , வரைவாக உடன் போக்காக ஒன்று வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரை அவன்றனக்கு அறிவுறுத்தலும் ஆம் . இது நாணுத் துறந்தவழி நிகழ்வதாகலான் , ணுத்துறவுஉரைத்தலின் பின் வைக்கப்ப்பட்டது.] (அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) அலர் எழ ஆர் உயிர் நிற்கும்-மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர்அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார். (அல்ல குறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும்,அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான்,' என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(அல்லகுறிப்பட்ட பின்வந்த தலைமகனைத் தோழி அலரறிவுறுத்தி வரைவு கடாயவிடத்து, அவன் சொல்வியது.) அலர் எழ ஆருயிர் நிற்கும்-என் காதலியோடு எனக்குள்ள தொடர்பு அலராயெழுகின்றதனால், அவளைப் பெறாது வருந்தும் என் அருமையான வுயிர் அவளைப் பெற்றது போன்றுமகிழ்ந்து நிலை பெறும்; அதனைப் பாக்கியத்தாற் பலர் அறியார்-அவ்வுண்மையை என் நற்பேற்றினால் அலர் கூறும் பலரும் அறியார். அல்லகுறிப்படுதலாவது, இரவுக்குறிக் காலத்தில் தலைமகன் வரவறிவிக்குங்குறி தற் செயலாக நிகழ்ந்து, தோழியுந் தலைமகளுஞ் சென்று தலைமகனைக் காணாது திரும்புதல். உயிரினுஞ் சிறந்ததொன் றின்மையான் 'ஆருயிர்' என்றும்; தன் காதலியைப் பெறாமையல் அவ்வாருயிர் மிகத் துன்புற்று நீங்கும் நிலையிலிருத்தபோது, அலரெழுந்து பெறற்கரியவளை எளியளாக்கி அவளைப் பெறுதற்குத் துணையாக நின்றமையின், 'அலரெழ வாருயிர் நிற்கும்' என்றும் ; அதை அலர்கூறுவார் அறிந்திருப்பின் அது கூறாராதலானும், அதனால் உயிர் போமாதலானும், அங்ஙனம் போகாது தடுக்கின்ற அவரறியாமை தனக்கு நற்பேறாக (Blessing in disguise) வாய்த்ததென்றும்; கூறினான். முற்றும்மை செய்யுளால் தொக்கது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வதந்தி பரவுவதால் காதல் வெற்றி பெறும் என்று பலர் அறியாத காரணத்தால் ஆருயிர் நிற்கிறது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அ·து என் நல்வினையின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.

Thirukkural in English - English Couplet:


By this same rumour's rise, my precious life stands fast;
Good fortune grant the many know this not!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.

ThiruKural Transliteration:


alarezha aaruyir niRkum adhanaip
palaraRiyaar paakkiyath thaal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore