திருக்குறள் - 523     அதிகாரம்: 
| Adhikaram: sutrandhazhaal

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

குறள் 523 - திருவள்ளுவர் - ThiruValluvar

"alavalaa villaadhaan vaazhkkai kulavalaak" Thirukkural 523 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை, குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும். இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதாவன் வாழ்க்கை, குளவளாக் கோடுஇன்றி நீர் நிறைந்தற்று -குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும். (சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகுபெயர்.'வாழ்க்கை' என்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை. 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான்செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - உறவினத் தொடு உள்ளக் கலப்பில்லாதவன் செல்வவாழ்க்கை ; குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்த அற்று - குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போலும். கரையில்லாத குளத்துநீர் காப்பின்றி வெளிச்சென்று விடுவது போல , உறவின மில்லாதவன் செல்வழுங் காப்பாரின்றிப் பிறர் கைப்பட்டு விடும் என்பதாம் . உறவினத்தொடு என்பது அதிகாரத்தால் வந்தது . அளவுதல் - கலத்தல் அல்லது கலந்துபேசுதல் . 'அளாவு' அளவு என்பதன் நீட்டம் . அளவளாவு(தல்) என்பது அளப்பள(த்தல்) என்பது போல் பெயரும் வினையுஞ் சேர்ந்த கூட்டுச்சொல் .அது இங்கு முதனிலைத் தொழிற்பெயராக நின்றது . வாழ்க்கை யென்றது செல்வத்தோடு கூடிய நல்வாழ்க்கை , நிறைதல் என்பது குளத்திற்கும் நீர்க்கும் பொதுவினையாதலின் , 'நீர் நிறைந்தற்று' , என்பது நீரால் நிறைந்தற்று என்னும் பொருள் படநின்றது . 'ஆன்றோர் அறிவுநிறைந்தோர்' என்னுந்தொடரமை தியை இதனொடு ஒப்புநோக்குக.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


சுற்றத்தாருடன் நெஞ்சு கலந்து பழகுதல் இல்லாதவனுடைய வாழ்க்கையானது குளத்தின் பரப்பானது இருக்க வேண்டிய கரையில்லாமல் நீர் நிறைந்தது போலாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உறவாடி மகிழாதவன் வாழ்க்கை கரையற்ற குளத்தில் நீர் நிறையாதுப் போன்று கெடும்.

Thirukkural in English - English Couplet:


His joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.

ThiruKural Transliteration:


aLavaLaa villaadhaan vaazhkkai kuLavaLaak
koatindri neernhirainh thatru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore