அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு.
Transliteration
aLiththanjal endravar neeppin theLiththasol
thaeRiyaarkku uNdoa thavaru.
🌐 English Translation
English Couplet
If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred
By those who trusted to his reassuring word?.
Explanation
If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
2 மணக்குடவர்
நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர் தௌ¤வித்த சொல்லைத் தௌ¤ந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ? தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்; தெளிந்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ? ('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போல் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங் குவி' என்பது கருத்து.)
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின்-தலைநாளில் எதிர்ப்பட்டபோதே பேரன்பு செய்து, நின்னிற் பிரியேன், அஞ்சேல் என்று தேற்றியவர் தாமே பின் மாறாப் பிரிவராயின்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ-அவரிடத்தன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யென்று நம்பியவரிடத்துக் குற்ற முண்டோ? சொன்னதை நிறைவேற்றாமைக் குற்றம் அவரிடத்துத் தங்காவறு செலவழுங்குவி என்பது கருத்து. 'தேறியார், என்பது தன்னைப் பிறர் போற் கூறிய தன்மைப் படர்க்கை. ஒகாரவினா எதிர்மறைக் குறிப்பினது.
5 சாலமன் பாப்பையா
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?.
6 கலைஞர் மு.கருணாநிதி
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?.
7 சிவயோகி சிவக்குமார்
இன்பம் அளித்து அஞ்சதே என்று சொன்னவர் பிரிந்தார் என்றால் அவரது தெளிவான சொல்லை கேட்டு தேறியவர்க்கு உண்டோ தவறு.
8 புலியூர்க் கேசிகன்
அருள் செய்த காலத்தில், ‘அஞ்சாதே’ என்று கூறி, என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப் பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ?
More Kurals from பிரிவாற்றாமை
அதிகாரம் 116: Kurals 1151 - 1160
Related Topics
Because you're reading about Pain of Separation