திருக்குறள் - 720     அதிகாரம்: 
| Adhikaram: avaiyaridhal

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

குறள் 720 - திருவள்ளுவர் - ThiruValluvar

"anganaththul ukka amizhdhatraal thanganaththaar" Thirukkural 720 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின். கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவரென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும். ('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம் கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல் - அறிஞராவார் அறிவால் தம் இனத்தவரல்லாதா ரவைக்கண் நிகழ்த்தும் அரும்பொருட் சொற்பொழிவு; அங்கணத்துள் உக்க அமிழ்து அற்று-சாய்கடைக்குள் ஊற்றிய பாலைப்போலும். இனி, தம் கணத்தர் அல்லார்முன் கோட்டிகொளல் - அறிஞராவார் அறிவால் தம் இனத்தவ ரல்லாதா ரவைக்கண் அரும்பொருட் சொற்பொழிவு நிகழ்த்தற்க; அங்கணத்துள் உக்க அமிழ்து அற்று - நிகழ்த்துவது சாய்கடைக்குள் ஊற்றிய பாலைப்போலும், என்றுமாம். இப்பொருள்கோட்குக் ' கொளல் ' ' அல்' லீற்று எதிர்மறை வியங்கோள். நிகழ்த்துவது என்பது அவாய் நிலையால் வந்தது.நிகழ்த்துவது என்றது நிகழ்த்தும் சொற்பொழிவை. இது பரிமேலழகர் கொண்ட பொருள்கோளைத் தழுவியது. இவ்விருவகைப் பொருள்கோளுள்ளும் முன்னதே இயற்கை யானதாம். 'ஆல்' அசைநிலை. "பிறரெல்லாங் 'கொள' லென்பதனைத் தொழிற் பெயராக்கி யுரைத்தார்; அவர் அத்தொழில் ' அமிழ் தென்னும் பொருளுவமையோடு இயையாமை நோக்கிற்றிலர்." என்றார் பரிமேலழகர். உவமத்தையும் பொருளையும் இணைக்குங்கால், பெயரொடு பெயரும் வினையொடு வினையும் இயையவேண்டுமென்பது சரியே. ஆயின், சொன்முறை செய்யுளின் யாப்பிற்கும் தொடைக்கும் ஏற்றவாறு ஆற்றொழுக்கினின்றும் சிறுபான்மை வேறுபட்டிருக்குமாதலால், உரையாசியர் அதை உரைநடை முறைப்படி மாற்றிக்கொள்ளல் வேண்டும். ஆதலால், 'உக்க அமிழ்தற்று' என்பதை அமிழ்து உக்கதற்று என்று மாற்றிக்கொள்வதே தக்கதாம். இனி, அங்ஙனமன்றி, 'கோட்டி கொளல் ' என்பதற்குக் கோட்டி கொள்ளும் சொல் அல்லது சொற்பொழிவு என்று பொருள்கொள்ளினும் பொருந்துவதாம். குறளின் போக்கையும் ஓசையையும் நோக்குமிடத்து. "குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே யுடம்போ டுயிரிடை நட்பு." (338) "குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் றுண்டாகச் செய்வன் வினை" (758) என்பவற்றிற்போல், உவமம் முன்னும் பொருள் பின்னுமாக ஒரே சொல்லியமாய் (வாக்கியமாய்) அமைந்திருப்பது விளங்கித் தோன்றுதல் காண்க. பரிமேலழகர் கருத்தே ஆசிரியர்க்கு இருந்திருக்கு மாயின், அங்கணத்து ளுக்க வமிழ்ததனாற் றங்கணத்த ரல்லார்முற் கோட்டி கொளல். என்றோ, தங்கணத்த ரல்லார்முன் சொல்லல் சொலினஃதாம் அங்கணத்து ளுக்க வமிழ்து. என்றோ, தெளிவாக யாத்திருப்பர். மேலும், இக்குறளை இருசொல்லியமாகக் கொள்வது, 'சொல்லின் அது ' அல்லது ' கொள்ளின் அது' என்னும் இருசொற்களை அவாவி நிற்றலும், அவையின்றேல் உவமம் பொருளின்றித் தனித்து நிற்றலும், காண்க. இனி, அங்கணத்தை வடமொழிப் பொருட்படி, முற்றம் என்றார் பரிமேலழகர். அது தென்சொல்லென்பதும் அதன் முதற்பொருள் சாய்கடை (சாலகம் என்பதும், அவர் அறிந்திலர். சாய்கடை (சாக்கடை) வாட்டஞ் சாட்டமாக இருந்தால்தான் அழுக்குநீர் அதன் வழியாக விரைந்தோடும். அல்லாக்கால், உள்முற்றத்தின் கோடியிலும் வீட்டோரத்திலும் தேங்கி நிற்கும். அங்கணம் என்னும் சொல்லும் சாய்தல் என்னும் வேர்ப்பொருளதே. வணங்கு-வாங்கு-வங்கு-அங்கு. இந்நாற் சொல்லும் வளைதற் பொருளவாம். அங்கு + அணம் (தொழிற் பெரீறு) = அங்கணம் (சாய்கடை). "ஊரங் கணநீ ருரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்-ஒரும் குலமாட்சி யில்லாருங் குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து." என்னும் நாலடிச் செய்யுளில் (175) , அங்கணம் என்னுஞ் சொல் சாய்கடை (சலதாரை) யென்றே பொருள்படுதல் காண்க. வளமனைகளிலும் மாளிகைகளிலும் உள்முற்றம் கற்பாவியும் சாந்து பூசியும் துப்புரவாயிருக்குமாதலால், அதிற் கொட்டிய பாலை நாயும் இரப்போனும் நக்கியும் உறிஞ்சியுங் குடிக்க முடியும். ஆயின், சாய்கடையில் ஊற்றிய பால் ஒருவனுக்கும் ஒன்றிற்கும் உதவாது. உள்முற்றத்தின் கோடியிலேயே சாய்கடை தொடங்குமாதலால்' வடவர் அங்கணம் என்னுஞ் சொற்கு முற்றம் என்னும் வழிப்பொருள் கொண்டனர். இனி, அமிழ்தம் என்பது இக்குறளில் இவ்வுலத்திலுள்ளபாலைக் குறிக்குமேயன்றித் தேவருலகத்திலுள்ளதாகக் கருதப்படும் எவ்வுணவையுங் குறிக்காது. பாலும் சாவா மருந்தே. இவ்விரு குறளாலும் தாழ்ந்தோரவைக்கண் உயர்ந்த பொருள்களைச் சொல்லற்க என்பது கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சாக்கடையில் உற்றிய அமிழ்து போன்றது, தகுதியற்றவர் முன் பேசுவது.

Thirukkural in English - English Couplet:


Ambrosia in the sewer spilt, is word
Spoken in presence of the alien herd.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.

ThiruKural Transliteration:


angaNaththuL ukka amizhdhatraal thangaNaththaar
allaarmun koatti koLal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore