திருக்குறள் - 428     அதிகாரம்: 
| Adhikaram: arivutaimai

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

குறள் 428 - திருவள்ளுவர் - ThiruValluvar

"anjuva thanjaamai paedhaimai anjuvadhu" Thirukkural 428 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மையாகும்; அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில். மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம். (பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின் ,ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனைஉடையாரது இலக்கணம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் -அஞ்சவேண்டுவதற்கு அஞ்சுவது அறிவுடை யார் செயலாம். அறங்கடையும் (பாவமும்) பழியும் அழிவும் அஞ்சப்படுவன. அவற்றை 'அஞ்சுவது' என்றது வகுப்பொருமை. அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாமைபோன்றே, அஞ்சவேண்டாதற்கு அஞ்சுவதும் பேதைமையாம். இருட்டிடமும் நாட்டுப்போரும் அவைப்பேச்சும் அஞ்சவேண்டாதன, 'அஞ்சாமை' பொருட்படுத்தாது செய்து துன்புறுதல் அல்லது கெடுதல். 'அஞ்சல்' பொருட்படுத்தித் தவிர்ந்து இன்புறுதல். அஞ்சுவதஞ்சல் அறிஞர் இயல் பென்றற்கு 'அறிவார் தொழில்' என்றார். முன்பு அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப் பட்டமையால் (382). அதற்கு மாறான அஞ்சுவதும் அரசனுக்குண்டென்று இங்குக் கூறியவாறு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பயப்பட வேண்டியதற்கு பயம் இல்லாது இருப்பது அறியாமை பயப்பட வேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகளின் தொழில்.

Thirukkural in English - English Couplet:


Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

ThiruKural Transliteration:


anjuva thanjaamai paedhaimai anjuvadhu
anjal aRivaar thozhil.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore