திருக்குறள் - 45     அதிகாரம்: 
| Adhikaram: ilvaazhkkai

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

குறள் 45 - திருவள்ளுவர் - ThiruValluvar

"anpum aranum udaiththaayin illval" Thirukkural 45 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவுமாகும். இல்லறவாழ்க்கை இருபகட்டொருசகட் டொழுக்கம் போல்வ தாகலின், கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும் அறம் பயனும் ஆகும் என்பது நிரனிறை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லற வாழ்க்கையானது அன்பினையும் அறத்தினையும் உடையதாக இருக்குமேயானால் அதுவே இல்லறத்தின் பண்பும் பயனுமாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அடுத்தவர்களும் வாழவேண்டும் என்ற மனமும்,தனக்குத் தானே உண்மையாக இருக்கும் குணமும், உண்டாக குடும்ப வாழ்க்கையே பண்போடு பயன் தருவதாக இருக்கிறது .

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப்படியே நிகழ்ந்து வருவதும் உடையதானால், இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும்.

Thirukkural in English - English Couplet:


If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If the married life possess love and virtue, these will be both its duty and reward.

ThiruKural Transliteration:


anpum aRanum udaiththaayin ilvaazhkkai
paNpum payanum adhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore