திருக்குறள் - 175     அதிகாரம்: 
| Adhikaram: veqkaamai

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

குறள் 175 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aqki akandra arivennaam yaarmaattum" Thirukkural 175 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அஃகி அகன்ற அறிவு என் ஆம் - உணர்வால் நுணுகிப் பொருளாற் பரந்த ஒருவரது கல்வியறிவால் என்ன பயனாம்? வெஃகி யார்மாட்டும் வெறிய செயின் -அவர் பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் தம் அறிவொடு பொருந்தாத செயல்களைச் செய்வாராயின். யார் மாட்டும் வெறிய செய்தலாவது , நல்லார் பொல்லார் சிறியார் , பெரியார் , இளையார் மூத்தார் , ஆடவர் பெண்டிர், நலவர் பிணியர், என்னும் வேறுபாடின்றி , இழிந்தனவுங் கடியனவுஞ் செய்தல். வெறுமை அறிவென்னும் உள்ளீடின்மை. அறிவாற் பயனின்மையின் 'என்னாம்' என்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பொருளை விரும்பி யாவரிடத்தும் அறத்துடன் பொருந்தாத செயல்களை அறிவுடையோர் செய்வாராயின், நுணுக்கமான பல நூல்களிலும் சென்ற அவர்களுடைய அறிவு என்ன பயன் உடையதாகும்?.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


புரிதல் அற்ற (மனச் சிதைவு)அறிவாகிவிடும் யாராக இருப்பினும் வேட்கை கொண்டு வெறியுடன் நடந்தால்.

Thirukkural in English - English Couplet:


What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?.

ThiruKural Transliteration:


aqki akandra aRivennaam yaarmaattum
veqki veRiya seyin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore