அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
Transliteration
aRan-noakki aatrungol vaiyam puran-noakkip
punsol uraippaan poRai.
🌐 English Translation
English Couplet
'Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours' absence watching, tales or slander tell abroad.
Explanation
The world through charity supports the weight of those who reproach others observing their absence.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?.
2 மணக்குடவர்
பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.
3 பரிமேலழகர்
புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாடடானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் இல்லாத சமயம் பார்த்து அவரைப் பழித்துரைக்கும் புறங் கூற்றாளனது உடலைப் பொறுத்தலை; வையம் அறன்நோக்கி ஆற்றுங்கொல் - மாநிலம் தனக்கு அறமென்று கருதிச் செய்யும் போலும்! தன்னை அகழ்வாரைப் தாங்கும் நிலத்திற்கும் புறங்கூற்றாளன் உடலைச் சுமத்தல் அரிதென்னுங் கருத்தால். 'அறனோக்கி யாற்றுங் கொல்' என்றார். பொறை என்னும் சொல் இங்குச் சுமத்தலும் பொறுத்துக்கொள்ளுதலுமாகிய இரு பொருளையும் ஒருங்கே தழுவிய தாம். 'கொல்' ஐயங்கலந்த உய்த்துணர்வு.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
புறம் பேசுதலான குற்றத்தினைச் செய்து பழிச் சொற்களை உரைப்பவனுடைய உடல் பாரத்தினைத் தாங்குவதுதான் அறம் என நினைத்து இப்பூமி தாங்கிக் கொண்டிருக்கின்றது போலும்!.
6 சாலமன் பாப்பையா
பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!.
7 கலைஞர் மு.கருணாநிதி
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை இவனைச் சுமப்பதும் அறமே என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.
8 சிவயோகி சிவக்குமார்
நீதியின் பொருட்டு வழிமுறைப் படுத்துகிறதோ உலகம் இடம் பார்த்து புறம் சுபவரையும் பொறுமையால்.
More Kurals from புறங்கூறாமை
அதிகாரம் 19: Kurals 181 - 190
Related Topics
Because you're reading about No Backbiting