திருக்குறள் - 635     அதிகாரம்: 
| Adhikaram: amaichchu

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

குறள் 635 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aranarindhu aandramaindha sollaanenhj gnaandrunh" Thirukkural 635 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன் அரசற்குச் சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை - அவற்குச் சூழ்ச்சித் துணையாம். (தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒடு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசியலறங்களை யறிந்து தனக்குரிய கல்விநிறைந்து அடங்கிய சொல்லையுடையவனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்திற் கேற்பவும் வினைசெய்யுந் திறங்களை அறிந்தவன் , தேர்ச்சித் துணை - அரசனுக்குச் சூழ்ச்சித் துணையாவான். இயற்கையால் தட்பவெப்பநிலை வேறுபட்டகாலங்களும், அரசனது செல்வநிலை வேறுபட்ட காலங்களும், பகையரசன் முன்னறிவிப்பின்றித் திடுமென்று வந்து தாக்குங்காலமும் உட்பட , 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதன் ஈற்றை ஒடுவுருபின் பொருள தாகிய ஆனுருபாகக் கொண்டு உரைப்பினும் பொருள் சிதையாதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


செய்ய வேண்டிய அறம் இன்னது என்று அறிந்து ஏற்ற கல்வியால் அமைத்து சொல்லினையுடையவனாக, எக்காலத்திலும் தொழில் செய்யும் திறன்களையுடைய அமைச்சனே மன்னனுக்குச் சிறந்த துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நீதி மாறாது வாழும் நிலை அறிந்து, மேன்மையானவற்றை எடுத்துரைப்பவர் எப்பொழுதும், திறமைகளை அறிந்தவருக்கு மேலும் தேர்ச்சிப் பெற துணையாவார்.

Thirukkural in English - English Couplet:


The man who virtue knows, has use of wise and pleasant words.
With plans for every season apt, in counsel aid affords.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions).

ThiruKural Transliteration:


aRanarindhu aandramaindha sollaanenhj Gnaandrunh
thiRanarindhaan thaerchchith thuNai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore