"araththaan varuvadhe inpam" Thirukkural 39 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா. தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
அறத்தான் வருவதே இன்பம் - இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த - அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. ('ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
அறத்தான் வருவதே இன்பம் - அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது; மற்று எல்லாம் புறத்த-வேறு தீயவழியில் வருவனவெல்லாம் இன்பம்போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே; புகழும் இல-அதோடு அவை புகழுடையனவும் ஆகா. இங்கு இன்பமென்று பொதுப்படக் கூறியது உலகின்பமாகிய சிற்றின்பத்தை; அறவழியல்லது வேறுவழியிற் பேரின்பம் ஒருவன் பெறமுடியாதாகலின். உலக வின்பம் ஒருபுலவின்பமும் பல புலவின்பமும் ஐம்புலவின்பமாகிய முற்றின்பமும் என முத்திறப்படும். வண்ணவோவியமும் எழுவும்யாழும் இன்னடிசிலும் நறுவிரையும் மெல்லணைக் கட்டிலும் போல்வன, ஒருபுலவின்பமே தருவன; அழகிய வளமனையும் பல்வகைப் பழுமரக்காவும் போல்வன பலபுலவின்பந் தருவன; கட்டழகியான கற்புடை மனைவியெனின் ஐம்புலவின்பமும் ஒருங்கே தர வல்லாள். இனி, இன்பப் பொருள் போன்றே அதனைக்கொள்ளும் செல்வப்பேறும் உள்ளத்திற்கு இன்பந்தருவதாகும். காசு தானாக இன்பந்தராவிடினும் இன்பப் பொருள்களைக் கொள்ளுங் கருவியாதல் காண்க. விலையாகக் கூடிய எல்லாப் பொருளும் காசுபோற் பயன் படுவனவே. ஒருவன் அறவழியில் தேடிய தன்பொருளை நுகர்வதே புகழோடு கூடிய இன்பமாம்;பிறன்பொருளை நுகர்வது பழியோடு கூடிய துன்பமாம். பிரிநிலை யேகாரம் பின்னுங் கூறப்பட்டது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
அறச்செயல்களினால் வருவதுதான் உண்மையான இன்பமாகும். மற்ற முறைகளில் வருவன்வெல்லம் இன்பமும் அல்ல; புகழுடையனவும் ஆகா.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
அறச் செயல்களால் வருவதுவே இன்பம் மற்றவை வெளியே கூட மதிக்கப்படுவது இல்லை.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை.
Thirukkural in English - English Couplet:
What from virtue floweth, yieldeth dear delight;
All else extern, is void of glory's light.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.
ThiruKural Transliteration:
aRaththaan varuvadhe inpam MatRellaam
puRaththa pukazhum ila.