அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
Transliteration
aRaththaaRu ithuvena vaeNtaa sivikai
poRuththaanodu oorndhaan idai.
🌐 English Translation
English Couplet
Needs not in words to dwell on virtue's fruits: compare
The man in litter borne with them that toiling bear.
Explanation
The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
2 மணக்குடவர்
நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம். இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.
3 பரிமேலழகர்
அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின் 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தாணோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம், உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.
4 ஞா. தேவநேயப் பாவாணர்
அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இதுவென்று உரையளவையால் ஒருவர் அறிவிக்க வேண்டியதில்லை ; சிவிகை பொறுத்தானோடு ஊந்தான் இடை - பல்லக்கைச் சுமப்பானோடு அதில் ஏறிச் செல்வானிடைப் பட்ட காட்சியளவையாலேயே அது அறியப்படும். இதுவே ஆசிரியர் கருத்தென்பது, பின்னர் அவர் ஆங்காங்கு நூலிற் கூறும் கூற்றுக்களாலும், பல்பிறவியும் பழவினையும் பற்றி அவர்க்கிருந்த நம்பிக்கையாலும், "செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம்-வையத்து அறும்பாவ மென்னவறிந் தன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோ மேல்". என்னும் ஒளவையார் கூற்றாலும், (நல்வழி-17) "Need not in words to dwell on virtue's fruits: compare .The man in litter borne with them that toiling bear!" என்னும் போப்பையர் மொழிபெயர்ப்பாலும், அறியப்படும். பல்லக்கைச் சுமப்பாரையும் அதில் ஏறிச் செல்வானையுங் காட்டி இதுதான் அறத்தின் பயன் என்று கூறாதே. என்பதை இக்குறளுரையாகக் கூறுவது ; இக்காலத்திற் கேற்குமேயன்றி ஆசிரியர் கருத்தாகாது. ஆறென்பது வழி, அறத்தின் வழிப்பட்ட பயனை ஆறென்றார் அறியப்படும் என்பது சொல்லெச்சம்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
அறத்தினை வழி (பயன்) இதுதான் என்று கேட்டறிய வேண்டுவதில்லை; பல்லக்கினைத் தூக்கிக் கொண்டு போகின்றவனையும் உள்ளே உட்கார்ந்து கொண்டு போகின்றவனையும் பார்க்கும் காட்சி அளவினாலேயே உணர்ந்து கொள்ளப்படும்.
6 சாலமன் பாப்பையா
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
7 கலைஞர் மு.கருணாநிதி
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.
8 சிவயோகி சிவக்குமார்
அறம் இதுவென என்னதே பல்லக்கில் அமர்தவனுடன் சுமப்பவனை சேர்த்து.
9 புலியூர்க் கேசிகன்
சிவிகையைச் (பல்லக்கு) சுமப்பவனோடு, அதனில் அமர்ந்து செல்பவன் ஆகியவரிடையே, ‘அறத்தின் வழி இதுதான்’ என்று கூற வேண்டாம்.
More Kurals from அறன்வலியுறுத்தல்
அதிகாரம் 4: Kurals 31 - 40
Related Topics
Because you're reading about Ethics & Morality