அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
Transliteration
araththinooungu aakkamum illai adhanai
maRaththalin oongillai Kaedu.
🌐 English Translation
English Couplet
No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.
Explanation
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
2 மணக்குடவர்
ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.
3 பரிமேலழகர்
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவர்க்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்கவழியுமில்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதை மறந்து செய்யாது விடுவதினும் பெரிய கெடுதல்வழியு மில்லை. 'அறத்தினூஉங்கு' இன்னிசை யளபெடை. செய்யாமையாகிய எதிர்மறையொடு வேற்றுமைப் படுத்திக் காட்டற்கு, மேற்கூறிய உடன்பாட்டுச் சொல்லியத்தை (வாக்கியத்தை) வழிமொழிந்தார்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
ஆறாம் செய்வதனைவிட மேம்பட்ட செல்வமும் இல்லை; அந்த அறத்தினை அஞ்ஞானத்தால் மறைப்பதை விடப் பெரிய தீமையும் இல்லை.
6 சாலமன் பாப்பையா
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.
7 கலைஞர் மு.கருணாநிதி
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
8 சிவயோகி சிவக்குமார்
அறமுடன் உயர்வு போல் செயல் இல்லை,இதனை மறுத்தால் உயர்வு இல்லை கேடுதான்.
9 புலியூர்க் கேசிகன்
அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை; அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை.
More Kurals from அறன்வலியுறுத்தல்
அதிகாரம் 4: Kurals 31 - 40
Related Topics
Because you're reading about Ethics & Morality