அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான்.
Transliteration
aridharoa thaetram arivudaiyaar kannum
pirivoa ritaththunmai yaan.
🌐 English Translation
English Couplet
To trust henceforth is hard, if ever he depart,
E'en he, who knows his promise and my breaking heart.
Explanation
As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.
2 மணக்குடவர்
பிரியேனென்ற தஞ்சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர்கண்ணும் ஒரோ வழிப் பிரிவு நிகழ்தலான் அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டன்புடையரெனத் தேறுந்தேற்றம் அரிதாயிருந்தது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. (அரோ: அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.)
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அறிவு உடையார் கண்ணும் -உன்னிற் பிரியே னென்று தாம் உரைத்த சொல்லை மறவாதும், நம் பிரிவாற்றாத்தன்மையை நன்றாக அறிந்துமுள்ள காதலரிடத்தும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான்-ஓரொரு சமையத்துப் பிரிவு நிகழ்தலால்; தேற்றம் அரிது - அவர் இன்சொல்லும் பேரன்புச் செயலும்பற்றி, நம்பாற் பிரியாத அன்புடையரெனத் தெளியும் உறுதி அரிதாயிருந்தது. 'அரோ' அசைநிலை . உம்மை உயர்வு சிறப்பு.
5 சாலமன் பாப்பையா
எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.
6 கலைஞர் மு.கருணாநிதி
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; பிரிந்திடேன் என அவர் கூறுவதை உறுதி செய்திட இயலாது.
7 சிவயோகி சிவக்குமார்
அறிவுள்ளோர்க்கும் தேற்றிக் கொள்ளவது அரிதாக இருக்கிறது பிரிவு ஒரிடத்தில் உண்மையாகி விடுவதால்.
8 புலியூர்க் கேசிகன்
அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் பிரிவது ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், ‘பிரியேன்’ என்று சொன்ன சொல்லையும் என்னால் நம்ப முடியவில்லை!
More Kurals from பிரிவாற்றாமை
அதிகாரம் 116: Kurals 1151 - 1160
Related Topics
Because you're reading about Pain of Separation