Kural 1139

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

aRikilaar ellaarum endrae-en kaamam
maRukin maRukum marundu.

🌐 English Translation

English Couplet

'There's no one knows my heart,' so says my love,
And thus, in public ways, perturbed will rove.

Explanation

My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

2 மணக்குடவர்

என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) என் காமம்-எனது காமம் ; எல்லாரும் அறிகிலார் என்று - யான் இதுவரை அடங்கி நின்றதால் எல்லாரும் என்னை அறிந்திலர் , இனிமேல் அவ்வாறிராது நானே வெளிப்பட்டறிவிப் பேனென்று எண்ணி ; மறுகில் மருண்டு மறுகும் - இவ்வூர்ப் பெருந் தெருவெல்லாம் மயங்கிச் சுழலும் . மயங்குதல் அலரத் தொடங்குதல் ; மறுகுதல் அலராதல் . இனி அறத்தொடு நிற்றல்வேண்டும் என்பது குறிப்பு . அறிவிலார் என்பதும் பாடம் .

5 சாலமன் பாப்பையா

என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!.

7 சிவயோகி சிவக்குமார்

எல்லாரும் அறியமுடியாது என்றே என் காமம் மறைக்க முடியாமல் மறைந்திருப்பதாக சபலமடைகின்றது.

8 புலியூர்க் கேசிகன்

பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்லை என்று நினைத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திருகின்றது போலும்!

More Kurals from நாணுத்துறவுரைத்தல்

அதிகாரம் 114: Kurals 1131 - 1140

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature