திருக்குறள் - 515     அதிகாரம்: 
| Adhikaram: therindhuvinaiyaatal

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

குறள் 515 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arindhaatrich seykirpaarku allaal vinaidhaan" Thirukkural 515 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யும் உபாயங்களை யறிந்து, செயலானும் இடையூறுகளானும் வருந் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்யவல்லானையல்லது வினைதான் இவன் நம்மாட்டன்புடையானென்று பிறனொருவனையேவும் இயல்புடைத்தன்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானையல்லது, வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று - வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று. ('செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினைதான் - எவ்வினையுந்தான் ; அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் வழிகளை யறிந்து செயலாலும் இடையூறுகளாலும் வருந்துன்பங்களைப் பொறுத்துச் செய்து முடிக்க வல்லானையல்லது; சிறந்தான் என்று ஏவல் பாற்று அன்று - இவன் நம் மிடத்துச் சிறந்த அன்புடையவனென்று வேறு எவனையும் ஏவத்தக்கதன்று. 'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம் . கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை . பாலது - பாற்று ( பால் + து ) . அறிவாற்றல் பொறையூக்கங்களாலன்றி அன்பினால் மட்டும் எவ்வினையும் முடியா தென்பது கருத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தொழியினைத் தக்கபடி ஆராய்ந்தறிந்து முடிவு செய்ய வல்லவனையல்லாமல், 'இனி நம்மிடத்தில் அன்பு உள்ளவன்' என்ற காரணத்தினால் தொழிலின்மேல் ஒருவனை அமர்த்தும் தன்மை கூடாது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எப்படி என்பதை அறிந்து ஆற்றலுடன் செயல்படுபவருக்கு அல்லாமல் செயல்படுவதில் மட்டுமே சிறந்தவனை தூண்டக்கூடாது.

Thirukkural in English - English Couplet:


No specious fav'rite should the king's commission bear,
But he that knows, and work performs with patient care.

ThirukKural English Meaning - Couplet -Translation:


(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

ThiruKural Transliteration:


aRindhaatrich seykiRpaaRku allaal vinaidhaan
siRandhaanendru EvaRpaaR Randru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore