திருக்குறள் - 843     அதிகாரம்: 
| Adhikaram: pullarivaanmai

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

குறள் 843 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arivilaar thaandhammaip peezhikkum peezhai" Thirukkural 843 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாதார் தாமே தம்மை யிடர்ப்படுத்தும் இடர்ப்பாடு, பகைவர்க்கும் செய்தல் அரிது. இது மேற்கூறியதனை வலியுறுத்திற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது - அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது. (பகைவர் தாம் அறிந்ததொன்றனைக் காலம் பார்த்திருந்துசெய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும்எக்காலத்தும் செய்யமாட்டாமையின், அவர்க்கும் செய்தல்அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல்அறிவர் என்பது கூறப்பட்டது.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு இலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை-புல்லறிவாளர் தாமே தம்மைத் துன்புறுத்திக் கொள்ளும் துன்பம்; செறுவார்க்கும் செய்தல் அரிது--அதைச்செய்தற்குரிய பகைவராலுஞ் செய்தற் கியலாதாம். இயலாமை அளவும் வகையும் கடுமையும் பற்றியதாகும். பகைவர் தம்மாலியன்ற தீங்கைமட்டும் காலமும் இடமும் அறிந்து நால்வகை வலியும் ஒப்புநோக்கித் தீர எண்ணிச் செய்வர். புல்லறிவாளரோ வறுமை, நோய், கரிசு(பாவம்), பழி முதலியன பலவகைத்துன்பங்களையும் எச்சமையத்தும் தாமே தேடிக்கொள்ளுதலின் செறுவாரக்குஞ் செய்தலரிது என்றார். உம்மை இழிவு சிறப்பு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு இல்லாதவர் தங்களுக்கு தாங்களே பெரிதாக ஏற்படுத்திக் கொள்ளும் துன்பம் போல் அவர்களது பகைவருக்கும் செய்வது அரிது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து கொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும்.

Thirukkural in English - English Couplet:


With keener anguish foolish men their own hearts wring,
Than aught that even malice of their foes can bring.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.

ThiruKural Transliteration:


aRivilaar thaandhammaip peezhikkum peezhai
seRuvaarkkum seydhal aridhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore