அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.
Transliteration
aRivinuL ellaanh thalaiyenpa theeya
seRuvaarkkum seyyaa vidal.
🌐 English Translation
English Couplet
Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.
Explanation
To do no evil to enemies will be called the chief of all virtues.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
2 மணக்குடவர்
எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை. இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.
3 பரிமேலழகர்
அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
செறுவார்க்கும் தீய செய்யா விடல்-தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் செய்யாது விடுதலை; அறிவினுள் எல்லாம் தலை என்ப-அறிவுச் செயல்களெல்லாவற்றுள்ளும் தலையாயதென்பர் அறிவுடையோர். நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையுஞ் செய்வதே மக்களியல்பாதலால், தீமைக்கு நன்மை செய்வதை அல்லது தீமை செய்யாமையைச் சிறந்த அறிவுச் செயலென்றார். உம்மை இழிவு சிறப்பு. 'செய்யா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். அறிவினால் ஒழுக்கம் பயனாதலின் ஒழுக்கம் அறிவெனப்பட்டது.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தமக்குத் துன்பம் உண்டாக்குபவர்களுக்கும் தீவினைகளைச் செய்யாமல் விடுதல் என்பதை அறிவுகள் எல்லாவற்றிற்கும் தலையாய அறிவு என்று நல்லோர் சொல்லுவர்.
6 சாலமன் பாப்பையா
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
7 கலைஞர் மு.கருணாநிதி
தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.
8 சிவயோகி சிவக்குமார்
அறியவேண்டியதில் எல்லாம் முதன்மையானது தீயதை செய்தவர்க்கும் செய்யாது விடுவது.
More Kurals from தீவினையச்சம்
அதிகாரம் 21: Kurals 201 - 210
Related Topics
Because you're reading about Fear of Sin