திருக்குறள் - 427     அதிகாரம்: 
| Adhikaram: arivutaimai

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

குறள் 427 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arivutaiyaar aava tharivaar arivilaar" Thirukkural 427 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார், அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர். இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார். (முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய வல்லவர்; அறிவிலார் அஃது அறிகல்லாதவர் -அறிவில்லாதவர் அதனை முன்னறியும் ஆற்றலில்லாதவர். முன்னறிதல் எண்ணியறிதலும் எண்ணாதறிதலும் என இருவகை. எண்ணியறிதல் பொதுவகைப்பட்ட அறிஞர் செயல்; எண்ணா தறிதல் இறைவனால் முற்காணியர்க்கு (Prophets) அளிக்கப் பட்ட ஈவு. "பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார்" என்று மணக் குடவபரிப்பெருமாளரும் , "அறிவுடையவர் ஆகும் காரியம் அறிவார்". என்று பரிதியாரும், "உலகத்து அறிவுடையோர் ----------- தமக்கு இருமை ஆக்கமும் ஆவதனை அறிந்து ஒழுகுவாரே." என்று காளிங்கரும், உரைப்பர். தமக்கு நன்மையாவதை அறிவது தன்னல வியல்பேயன்றி அறிவுடைமையாகாது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு உள்ளவர்கள் அடுத்து நடப்பதை அறிவார்கள் அறிவு இல்லாதவர்கள் அதை அறிய கல்லாதவர்கள்.

Thirukkural in English - English Couplet:


The wise discern, the foolish fail to see,
And minds prepare for things about to be.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.

ThiruKural Transliteration:


aRivutaiyaar aava thaRivaar aRivilaar
aqdhaRi kallaa thavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore