திருக்குறள் - 611     அதிகாரம்: 
| Adhikaram: aalvinaiyutaimai

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

குறள் 611 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arumai udaiththendru asaavaamai vaendum" Thirukkural 611 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - ஒரு வினை செய்யுமுன் தம்மைச்சிறியவராகக் கருதி அவ்வினை தம்மாற் செய்தற்கு அரிதென்று தளராமை வேண்டும் ; முயற்சி பெருமை தரும் - முயற்சியே அவ்வினையைச் செய்து முடித்தற் கேற்ற பெருமையைத் தமக்கு உண்டாக்கும் . சிறியவராகக் கருதி யென்பது பெருமை தரும் என்பதால் வருவிக்கப்பட்டது . வினை செய்தல் என்பது அதிகாரத்தால் வந்தது . விடா முயற்சியால் அரிய வினையும் எளியவினையாம் . ஆகவே , வினைமுடிப்பிற்கு ஏதுவாக மட்டு மன்றி அதன் விளைவாகவும் பெருமை உண்டாகுமென்பதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


'இத்தொழில் செய்து முடிக்க அருமையானது' என்று எண்ணி மனம் தளராதிருத்தல் வேண்டும். அதனை முடித்தற்கேற்ற பெருமையினைத் தனக்கு முயற்சி உண்டாக்குவதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரியது என்று செயல்பட அச்சம் அடைவது கூடாது. முயற்சி செய்வதே பெருமையானது.

Thirukkural in English - English Couplet:


Say not, 'Tis hard', in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).

ThiruKural Transliteration:


arumai udaiththendru asaavaamai vaeNdum
perumai muyaRchi tharum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore