Kural 847

அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

arumaRai soarum aRivilaan seyyum
perumiRai thaanae thanakku.

🌐 English Translation

English Couplet

From out his soul who lets the mystic teachings die,
Entails upon himself abiding misery.

Explanation

The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

2 மணக்குடவர்

அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.

3 பரிமேலழகர்

அருமறை சோரும் அறிவிலான் - பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும். ('சோரும'¢ என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. மிக்க வருத்தம் - பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி அருமறை சோரும் என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

அருமறை சோரும் அறிவு இலான்- பிறரிடம் சொல்லக் கூடாத உயிர்நாடியான மருமச் செய்திகளைத் தன் வாய்காவாது வெளிவிட்டுவிடும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - தானே தனக்குப் பெருங்கேட்டை வருவித்துக் கொள்வான். இக்குறட்கு, 'பெருதற்கரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன், அவ்வுறுதி யறியாமையாற் றானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்துகொள்ளும்". என்று தொடருரையும் , "இனி 'இருமறை சோரு' மென்பதற்குப் பிறரெல்லாம் உள்ளத்தடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்குரைக்கு மென்றுரைத்தார்; அதுபேணாமை யென்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மை யன்மை யறிக." என்று சிறப்புரையும் வரைந்தார் பரிமேலழகர். சமய குரவன் செவியறிவுறுத்தும் மந்திரப் பொருளைப் பண்பட்ட மாணவன் பெறுதல் அறத்துப்பாலில் துறவறவியலில் 'மெய்யுணர்தல்' என்னும் அதிகாரத்திற்கு ஏற்குமேயன்றி,பொருளீட்டுதல் பற்றிய பொருட்பாலில் எவ்வதிகாரத்திற்கும் ஏற்காது. சமயத்துறையும் மெய்ப்பொருளியலும் பற்றியவுரையே சாலச்சிறந்ததென்பது,பரிமேலழகர் கடைப்பிடித்த நெறிமுறையாத் தெரிகின்றது. 833 ஆம் குறளுரையில்,"பேணவேண்டுமவை; குடிப்பிறப்பு, கல்வி ,ஒழுக்க முதலியன. "என்று அவரே உரைத்தார் . அவை வெளிப்படையாகப் பேணவேண்டிய பண்பாட்டுக் கூறுகளே யன்றி, மறைவாக மனத்துள் வைத்துக் காக்கும் மருமச் செய்திகளல்ல. ஒருகால் மறை என்பதை மறைநூற் பொருளென்று பரிமேலழகர் கொண்டார் போலும். "அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான்." (குறள்.1076.) என்பதிற் குறித்தது பிறரைப் பற்றிய மறையென்றும் ,இங்குக் குறித்தது தன்னைப் பற்றிய மறையென்றும், வேறுபாடறிக. வெளிப்படின் பதவியும் செல்வமும் உயிரும் இழத்தற்குக் கரணியமாகும் மறைவுச் செய்திகளையே 'அருமறை' என்றார். அவை சிமிசோன் தன் மதவலிக்குக் கரணியமான பிறவிச்சடை நிலைமையைத் தெலீலாள் என்னும் பொதுமகளிடம் வெளிபடுத்தியது போல்வன . 'அருமறை சோரும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இனி, ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுச்சொல் எனினுமாம். அருமறை சோர்தல் அறிந்து சோர்வதும் அறியாது சோர்வதும் என இருவகைப்படும் . சிமிசோன் அறிந்து சோர்ந்தான்.

5 சாலமன் பாப்பையா

அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.

6 கலைஞர் மு.கருணாநிதி

நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

அரிய கருத்துக்களை விட்டோழித்த அறிவற்றவன் செயல் தனக்குத் தானே பெரிய துன்பத்தை ஏற்படுத்தும்.

8 புலியூர்க் கேசிகன்

அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத்தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.

More Kurals from புல்லறிவாண்மை

அதிகாரம் 85: Kurals 841 - 850

Related Topics

Because you're reading about Petty Mindedness

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature