திருக்குறள் - 198     அதிகாரம்: 
| Adhikaram: payanila sollaamai

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

குறள் 198 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arumpayan aayum arivinaar sollaar" Thirukkural 198 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிகுந்த பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லார். அறிதற்கரிய பயன்களாவன நாள்கோளியக்கமும் மெய்ப் பொருளியலும் வீடுபேறும் முதலியன. பெரும்பயனில்லாத சொல்லை சொல்லாரெனவே , சிறு பயன் தரும் சொல்லும் அவர் வாயினின்று வராதென்பது பெறப்படும். இதனால் அரும்பயனாராயும் அறிவினார்க்குச் சிறுபயன் சொல்லும் அறவே விலக்கப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிதற்கரிய நற்பயன்களை ஆய்ந்தறியும் அறிவுடையவர்கள், மிக்க பயனில்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரிதான பயனை ஆராயும் அறிவுள்ளவர்கள் சொல்லமாட்டார்கள் பெரிய பயனை விளைவிக்காத சொல்லை.

Thirukkural in English - English Couplet:


The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

ThiruKural Transliteration:


arumpayan aayum aRivinaar sollaar
perumpayan illaadha sol.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore