திருக்குறள் - 565     அதிகாரம்: 
| Adhikaram: veruvandhaseyyaamai

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

குறள் 565 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arunjevvi innaa mukaththaan perunjelvam" Thirukkural 565 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து. இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் - தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினையுடையானது பெரிய செல்வம், பேய் கண்டன்னது உடைத்து - பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து. (எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின, இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பது பற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அருஞ் செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் -காண விரும்பிய குடிகட்கு எளிதாய்க் காணப்படாதவனாகவும் அரிதிற் கண்டவர்க்கும் சுடுமுகத்தனாகவுமிருக்கும் அரசனின் பெருஞ்செல்வம்; பேய்கண்ட அன்னது உடைத்து-பூதங் காத்தாற் போன்ற தன்மையை உடையது. அரசன் செல்வம் குடிகட்குப்பயன் படாமையாலும் அண்டுதற்கிடமின்மையாலும் பேய்காத்தாற் போன்றதென்றார். செவ்வி பார்க்கத்தக்க செவ்வையான நிலை. அருமை-எளிதாய்க்கிட்டாமை. 'பேஎய்' இசைநிறை யளபெடை. செவ்வியருமையை அருஞ்செவ்வி யென்றது செய்யுள் நடை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காணமுடியாதவனாயும், கண்டால் கடிய முகத்தையுடைவனாகவும் இருக்கின்ற மன்னனுடைய செல்வம் பேயால் காணப்பட்டதொரு குற்றத்தினை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரிதாக கேட்டு இனிமை அற்று பார்பவன் அடைந்த அதிகபட்ச செல்வம் ஏதும் செய்யமுடியாத பேய் கண்ட காட்சி போன்றது.

Thirukkural in English - English Couplet:


Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.

ThiruKural Transliteration:


arunjevvi innaa mukaththaan perunjelvam
paeeykaN dannadhu udaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore