அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
Transliteration
arutchelvam selvaththuL selvam porutchelvam
pooriyaar kaNNum uLa.
🌐 English Translation
English Couplet
Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the vilest too possess.
Explanation
The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
2 மணக்குடவர்
செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால். இஃது அருள்நிலை கூறிற்று.
3 பரிமேலழகர்
[அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முன் கூறப்பட்டது.) செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
செல்வத்துள் செல்வம் அருள் செல்வம் - செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது அருளாகிய செல்வமே; பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள - மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்திலும் உள்ளன. செல்வம் போன்ற பண்பைச்செல்வ மென்றார். உம்மை இழிவு சிறப்பு.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
செல்வங்களுக்குள் சிறந்த செல்வமாவது அருளால் வரும் செல்வமேயாகும். அதுவல்லாமல், பிற செல்வங்கள் பொருளால் வருபவை. இழந்தவர்களிடத்திலும் இருப்பதாகும்.
6 சாலமன் பாப்பையா
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.
7 கலைஞர் மு.கருணாநிதி
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.
8 சிவயோகி சிவக்குமார்
அருட்செல்வமே செல்வத்தில் சிறந்த செல்வம் பொருட்செல்வமோ புரிந்துகொள்ள முடியாதவரிடத்திலும் (முட்டாள்கள் இடத்திலும்) இருக்கிறது.
More Kurals from அருளுடைமை
அதிகாரம் 25: Kurals 241 - 250
Related Topics
Because you're reading about Grace & Mercy