அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து.
Transliteration
aRuvaai niRaindha avirmadhikkup poala
maRuvuNdoa maadhar mukaththu.
🌐 English Translation
English Couplet
In moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here?.
Explanation
Could there be spots in the face of this maid like those in the bright full moon ?.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.
2 மணக்குடவர்
குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?. இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அறுவாய் நிறைத்த அவிர்மதிக்குப் போல - முன் குறைந்தவிடம் நிரம்பிய விளங்கும் மதியத்திற்குப்போல ; மாதர் முகத்து மறு உண்டோ - இப்பெண்ணின் முகத்தில் ஏதேனுங்களங்க முண்டோ ? இல்லையே ! அங்ஙனமிருந்தும் அவ்விண்மீன்கள் வேறுபாடறியாது கலங்கித் திரிவானேன் ? அறுவாய் கரும்பக்கம் , மதியம் முழுநிலா , தேய்தலும் வளர்தலுந் தோன்ற ' அறுவாய் நிறைந்த ' என்றான் . தேய்வுவளர்ச்சிகளும் மறுவுடைமையும் வேறுபாடறிவிக்கவும் , அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு .
5 சாலமன் பாப்பையா
நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?.
6 கலைஞர் மு.கருணாநிதி
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!.
7 சிவயோகி சிவக்குமார்
குறைந்து நிறையும் நிலையற்ற நிலாவினைப் போல் மாறுபாடு உண்டோ மங்கை முகத்திற்கு.
8 புலியூர்க் கேசிகன்
அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளது போல, இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ?
More Kurals from நலம்புனைந்துரைத்தல்
அதிகாரம் 112: Kurals 1111 - 1120
Related Topics
Because you're reading about Praising Beauty