திருக்குறள் - 943     அதிகாரம்: 
| Adhikaram: marundhu

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

குறள் 943 - திருவள்ளுவர் - ThiruValluvar

"atraal aravarindhu unka aqdhutambu" Thirukkural 943 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறுமென்று தான் அறிந்து உண்க. அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழி.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அற்றால் அளவறிந்து உண்க - முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அளவு அறிந்து அளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது - இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். (இம்மை மறுமை வீடு பேறுகள் எய்தற்பாலது ஈது ஒன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின், 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். 'பெற்றால்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அற்றால் அளவு அறிந்து உண்க - முன்னுண்டது செரித்துவிட்டால் பின்னுண்பதைச் செரிமான ஆற்றல், பசி, பருவம், உழைப்பு, உணவுவலிமை முதலியவற்றின் அளவறிந்து, உடல்நிலைக்கும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப அளவாக உண்ணுக; அஃது உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு - அங்ஙனம் உண்பதே பெறற்கரிய மாந்தனுடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலங் கொண்டுசெலுத்தும் வழியாகும். இம்மை மறுமை வீடென்னும் மும்மையின்பத்திற்கும் வேண்டிய முயற்சி செய்யக் கூடியது மாந்தப் பிறப்பொன்றேயாதலின் 'உடம்பு பெற்றான்' என்றும், அவ்வுடம்பு நீடுநிற்பின் அம் முயற்சியும் அதன் விளைவான இன்பமும் பெருகுமாதலின் 'நெடிதுய்க்குமாறு' என்றும் கூறினார். " அரிதரிது மானிட ராத லரிது மானிட ராயினுங் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்த லரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமுங் கல்வியு நயத்த லரிது ஞானமுங் கல்வியு நயந்த காலையும் தானமுந் தவமுந் தாஞ்செய லரிது தானமுந் தவமுந் தாஞ்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே." (தனிப்பாடல்) " உடம்பா ரழியி லுயிரா ரழிவர் திறம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கு முபாய மறிந்தே உடம்பை வளர்த்தே னுயிர்வளர்த் தேனே." (திருமந்திரம், 724 ) "உடம்பினை முன்ன மிழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென் றுடம்பினை யுள்ளிருந் தோம்புகின் றேனே."(க்ஷ 725) உடம்பானது வாழ்க்கை நெறியிற் செலுத்தும் சகடம் போன்றிருத்தலால், உடம்போடு கூடி வாழ்தலை உய்த்தல் என்றார். உடம்பைச் செலுத்துவது அல்லது இயக்குவது என்னும் பொருட்கரணியம் பற்றியே உயிர் என்ற சொல்லும் எழுந்தது. உய்-உயிர். 'பெற்றால்' என்னும் பாடவேறுபாடு பொருந்துவதன்று. பிறரெல்லாம் 'உண்க' என்றே பாட மோதினார். அப்பாடத்திற்கு இயற்சீர் வெண்டளை தட்டுதலின் அது பாடமன்மை யறிக. தமிழை ஆரிய அடிப்படையிற் கற்றவர், ஆய்தத்தை வடமொழி விசர்க்கம் போற்கொண்டு அது சிலவிடத்து ஒரு மாத்திரை கொண்ட உயிர்மெய்யாகவும் ஒலிக்கும் என்பர். அவர் அறியார். " மெய்யின் அளபே அரையென மொழிப." (11) " அவ்வியல் நிலையும் ஏனை முன்றே" (12) என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. "குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்"(2) ஏனை மூன்றாம். ஆய்தம் ஒரோவழி கால்மாத்திரையாகக் குறுகுமன்றி ஒருபோதும் ஒருமாத்திரையாக நீளாது. "உருவினும் இசையினு அருகித் தோன்றும் மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா ஆய்தம் அஃகாக் காலை யான." (40) என்னும் தொல்காப்பிய நூற்பாவை நோக்குக. சொல்வான் என்னும் சொல் (161) -ஆம் குறளிற் சொல்லுவான் என்னும், 'சொல்லுக' என்னும் சொல் (197)- ஆம் குறளிற் சொல்லுக என்றும், தளைக்கேற்ப விரிந்தவடிவில் நிற்றல் போன்றே, உண்க என்னும் சொல்லும் உண்ணுக என விரிந்து நின்றதென்க. அற்றேல், "அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி" (226) " கற்றில னுயினுங் கேட்க வஃதொருவற் கொற்கத்தி னூற்றாந் துணை." (414) " இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற் றுன்ப மதனிற் பெரிது." (1166) என்னுங் குறள்களின் முதலடியில் இயற்சீரான முன்றாம் சீரும் "வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை யாண்டு மஃதொப்ப தில்" என்னுங் குறளின் ஈற்றடியின் முதற் சீரும் எங்ஙனந் தட்குமெனின், அவற்றிலெல்லாம் அடுத்துவரும் அஃது என்னுஞ்சொல் அது' என்றே , முதலில் இருந்திருக்கவேண்டுமென்றும் பிற்காலத்தில் வடநூல்வழித் தமிழ்ப்புலவரோ ஏட்டைக்கெடுத்த எழுத்தாளரோ அதை ஆய்தச் சொல்லாக மாற்றியிருத்தல் வேண்டுமென்றும் அறிந்து கொள்க. அல்லாக்கால், "அன்பீனு மார்வ முடைமை யதுவீனும் நண்பென்னு நாடாச் சிறப்பு" (74) "ஈத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு." (231) " கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல தில்லை நிலக்குப் பொறை", (52) என்னுங் குறள்களில் 'அது' என்னுஞ்சொல் நின்றிரா தென்க. மேலும், " வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்" (38) "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்" (49) "அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்கு" (80) " அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்" (170) " ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்" (220) "தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்" (236) " அவா வில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்" (348) " மன நலத்தி னாகு மறுமைமற் றஃதும்" (495) "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேல்" (556) " கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலார்" (572) " கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேல்" (575) "உடைய ரெனப்படுவ தூக்கமஃதிலார் " (591) "உரமொருவற்குள்ள வெறுக்கைஃதில்லார் " (500) என்னு மிடங்களிலெல்லாம் ஆய்தம் அரைமாத்திரையே கொண்டிருத்தலையும் நோக்குக. இக்குறளால் அளவறிந்துண்ணவேண்டு மென்பது கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செரிக்கும் அளவை அறிந்து உண்ண வேண்டும். அதுவே உடம்பு பெற்ற துயரத்தை அழிக்கும் வழி.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


முன்னுண்டது அற்றபின், உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும்; அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி.

Thirukkural in English - English Couplet:


Who has a body gained may long the gift retain,
If, food digested well, in measure due he eat again.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.

ThiruKural Transliteration:


atraal aRavaRindhu uNka aqdhutambu
petraan netidhuykkum aaRu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore