திருக்குறள் - 226     அதிகாரம்: 
| Adhikaram: eekai

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

குறள் 226 - திருவள்ளுவர் - ThiruValluvar

"atraar azhipasi theerththal aqdhoruvan" Thirukkural 226 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக. அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம். இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அற்றார் அழிபசி தீர்த்தல் - வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது - பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான். (எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அற்றார் அழிபசி தீர்த்தல்-வறியவரின் கடும்பசியைத் தீர்க்க; அஃது ஒருவன் பொருள் வைப்புழி பெற்றான்-அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் (Savings Bank) பெற்றானாவன். கொல்வது போல வருத்துவதனாலும், குடிப்பிறப்பு கல்வி மானம் அறிவுடைமை முதலிய பேறுகளையும் பண்புகளையும் அழிப்பதனாலும், கடும்பசி அழிபசி யெனப்பட்டது. வறியவரின் பசியைத் தீர்த்தற்குச் செலவிட்ட பொருள் பின்பு தனக்கே வந்துதவுதலால் அருள் நோக்கிச் செய்யாவிடினும் தனக்குப் பயன்படும் அறம் நோக்கியேனும் அதைச்செய்க என்றவாறு. 'தீர்த்தல்' தல்லீற்று வியங்கோள். பெற்றான் என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. அஃதொருவன் என்பது அதுவொருவன் என்றும் இருக்கலாம். அடுத்த அதிகார முதற் குறளில் 'வாழ்தலதுவல்லது' என வருதல் காண்க.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


வறியவர்களது கொடிய பசியை ஆறாம் நோக்கிப் போக்குதல் வேண்டும். அப்படிச் செய்வதாவது, ஒருவன் தான் பெற்றிருக்கும் பொருளினைத் தனக்குப் பயன்படும்படியாக வைக்கும் இடம் என்று கருதப்படும். அந்த அறமே இடமாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாதவர்களின் அழிபசி தீர்த்துவிடுதல் ஒருவர் தான் பெற்ற பொருளை வைப்பதற்கான இடமாகும்.

Thirukkural in English - English Couplet:


Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.

ThiruKural Transliteration:


atraar azhipasi theerththal aqdhoruvan
petraan poruLvaip puzhi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore