Kural 1007

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

atraarkkondru aatraadhaan selvam mikanhalam
petraaL thamiyaLmooth thatru.

🌐 English Translation

English Couplet

Like woman fair in lonelihood who aged grows,
Is wealth of him on needy men who nought bestows.

Explanation

The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

2 மணக்குடவர்

பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம், மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி¢ தனியாளாய் முதிர்ந்தாற்போலும். இது செல்வம் தானும் ஒருபயன் பெறாதென்றது.

3 பரிமேலழகர்

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள்தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து. (நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளுமில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடாதவனது செல்வம் வீணாய்க் கழிதல் , மிக நலம் பெற்றாள் தமியள் மூத்த அற்று - குணத்திற்சிறந்த கட்டழகி யொருத்தி மணஞ்செய்து கொடுப்பாரின்மையால் கணவனின்றித் தனித்தவளாய் மூத்த தன்மைத்து. இதில் வந்துள்ள உவமம் பெண்ணின் உரிமையின்மையைக் காட்டுதலால், பெரும்பாலும் பண்டைக் காலத்திற்கே ஏற்றதாம்.எனினும் இக் காலத்திலும் இது நிகழக் கூடியதாதலால் உவமமாதற்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க. ' நலம் ' அகத்தழகு புறத்தழகு என்னும் இரண்டையுங் குறிக்கும். ' பெற்றாள்' என்பது இரண்டனையும் ஒருங்கே பெறுதலின் அருமையை உணர்த்தும்.பயன்படாமை செல்வ த்திற்கும் பெண்ணிற்கும் பொதுவேனும், செல்வம் நுகர்ச்சிப் பொருளாகவே யிருப்பதென்றும் ,பெண் கணவனை நோக்க நுகர்ச்சிப் பொருளாகவும் தன்னை நோக்க நுகர்வாளாகவும் இருப்பவள் என்றும் , வேறு பாடறிதல் வேண்டும். இதனால் தன் விருப்பப்படியே இறுதிவரை மணஞ் செய்யாதிருக்கும் குணமணிக் கட்டழகி , இக்குறட் கேற்ற உவமமாகாள் என்பதையும் அறிந்து கொள்க.

5 சாலமன் பாப்பையா

ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

6 கலைஞர் மு.கருணாநிதி

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.

7 சிவயோகி சிவக்குமார்

இல்லாதவற்கு கொடுத்து உதவாதவர் செல்வம் நல்லழகு பெற்றவள் தனித்தே வாழ்ந்து முதுமை அடைந்தது போன்றது.

8 புலியூர்க் கேசிகன்

ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல், தனியாகவே கிழவியானதைப் போன்றதாம்.

More Kurals from நன்றியில்செல்வம்

அதிகாரம் 101: Kurals 1001 - 1010

Related Topics

Because you're reading about Useless Wealth

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature