Kural 846

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

atram maRaiththaloa pullaRivu thamvayin
kutram maRaiyaa vazhi.

🌐 English Translation

English Couplet

Fools are they who their nakedness conceal,
And yet their faults unveiled reveal.

Explanation

Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

2 மணக்குடவர்

தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத்துப் பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு. எனவே, அதுவும் மறையானாயின் குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறிவென்றது.

3 பரிமேலழகர்

தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம். (குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.) .

4 ஞா.தேவநேயப் பாவாணர்

தம் வயின் குற்றம் மறையாவழி- புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து; அற்றம் மறைத்தலோ புல் அறிவு- தம் மரும வுறுப்புக்களை மட்டும் ஆடையால் மறைத்துக்கொள்ளுதல் சிற்றறிவாம். 'அற்றம்' ஆடையற்ற நிலை . மறைத்தல் இரண்டனுள் முன்னது கண்ணிற்குத் தோன்றாதவாறு செய்தல்; பின்னது இல்லாதவாறு செய்தல் . அற்றம் மறைத்தலினும் குற்றம் மறைத்தலே உயர்திணை மாந்தனுக்கு இன்றியமையாத தென்பது கருத்து. ஓகாரம் பிரிநலை.

5 சாலமன் பாப்பையா

தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.

6 கலைஞர் மு.கருணாநிதி

நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

அழிவை மறைப்பதே அற்பத்தனம், தனது குற்றம் மறையாமல் இருப்பதற்கும் இதுவே வழி.

8 புலியூர்க் கேசிகன்

தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்.

More Kurals from புல்லறிவாண்மை

அதிகாரம் 85: Kurals 841 - 850

Related Topics

Because you're reading about Petty Mindedness

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature