Kural 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

atuththadhu kaattum paLingupoal nenjam
katuththadhu kaattum mugam.

🌐 English Translation

English Couplet

As forms around in crystal mirrored clear we find,
The face will show what's throbbing in the mind.

Explanation

As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

2 மணக்குடவர்

தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும். இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது.

3 பரிமேலழகர்

அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும். ('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

அடுத்தது காட்டும் பளிங்குபோல்-தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் நிறத்தையும் தன்னுட்காட்டும் கண்ணாடி போல; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்- ஒருவர் மனத்தில் தோன்றிய கருத்தை அவர் முகமே காட்டிவிடும். 'அடுத்தது' ஆகு பொருளது. ஒரு கருத்து ஒருவர் உள்ளத்தில் முன்னில்லாது புதிதாய்த் தோன்றிய மிகையாதலின்,'கடுத்தது' எனப்பட்டது. கடுத்தல் மிகுதல். இவ்வுவமையில், தொடர்பினால் ஒன்றையொன்று காட்டுதல் பொதுத்தன்மையாம். பளிங்கு புறப்பொருளை அகத்திற் காட்டுவது; முகம் அகப்பொருளைப் புறத்திற் காட்டுவது.

5 சாலமன் பாப்பையா

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்.

7 சிவயோகி சிவக்குமார்

அருகில் உள்ளதை பளிங்கு எப்படி காட்டுமோ அப்படி நெஞ்சத்தில் உள்ளதை முகம் காட்டும்.

More Kurals from குறிப்பறிதல்

அதிகாரம் 71: Kurals 701 - 710

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature