திருக்குறள் - 1182     அதிகாரம்: 
| Adhikaram: pasapparuparuvaral

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

குறள் 1182 - திருவள்ளுவர் - ThiruValluvar

"avardhandhaar ennum thakaiyaal ivardhandhaen" Thirukkural 1182 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. ('குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியிருக்கவும்) பசப்பு- இப்பசலைதான்; தந்தார் அவர் என்னும் தகையால்- என்னை யுருவாக்கினவர் அவர் (காதலர்) என்னும் பெருமிதத்தால்; என் மேனிமேல் இவர் தந்து ஊரும்-என் உடம்பின்மேல் ஏறி என்னைச் செலுத்துகின்றது. இப்பசலை தன்னை என் தலைவர் தோற்றுவித்தார் என்னும் உரிமை பற்றி என்மீது ஊர்கின்றது. இதற்கு நீ கவல வேண்டேன் என்பதாம. ஊர்தல், பசலை படர்தல்.இப்படர்ச்சி குதிரையேற்றம் போற் கூறப்பட்டிருப்பது குறிப்புருவகம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் தந்தார் என்பதால் இவரைப் போல் என் மேனிமேல் ஊர்ந்து பரவுகிறது பசப்பு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘அவர் தந்தார்’ என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும், என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும் நிறைகின்றதே!

Thirukkural in English - English Couplet:


'He gave': this sickly hue thus proudly speaks,
Then climbs, and all my frame its chariot makes.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.

ThiruKural Transliteration:


avardhandhaar ennum thakaiyaal ivardhandhaen
maenimael oorum pasappu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore