Kural 1291

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

avarnenju avarkkaadhal kandum evannenjae
nee-emakku aakaa thadhu.

🌐 English Translation

English Couplet

You see his heart is his alone
O heart, why not be all my own?.

Explanation

O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?.

2 மணக்குடவர்

அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும் நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ?. இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.

3 பரிமேலழகர்

[அஃதாவது , காரணம் உண்டாய வழியும் புலக்கக் கருதாது , புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும் ,தலைமகன் புலத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.] (தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது? (அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(தலைமகன்கண் தவறுண்டாய விடத்தும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சே-என் உள்ளமே!; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும்-அவருடைய உள்ளம் நம்மை நினையாது. அவருக்கே யுதவுதல் கண்டபின்பும் ; நீ எமக்கு ஆகாதது எவன்- நீ எமக்கு உதவாது அவரையே நினைத்தற்குக் கரணியம் யாது? பிறர் நமக்குதவாது எப்போதுந் தன்னலமாகவே யிருக்கும் போது , நீ மட்டும் ஏன் தன்னலம் பேணாது பிறர் நலத்தையே நோக்குகின்றாய் என்பதாம் . அவர்க்காதல் அவர் கருதியதற் குடம் படுதல் . ' எமக்காகாதது ' என்றது புலவிக் குடம்படாமையை.

5 சாலமன் பாப்பையா

நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?.

6 கலைஞர் மு.கருணாநிதி

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?.

7 சிவயோகி சிவக்குமார்

அவரின் எண்ணமும் அவரின் காதலும் நன்கு அறிந்து எதனால் என் மனமே நீ எனக்கு எதிராக இருக்கிறாய்.

8 புலியூர்க் கேசிகன்

நெஞ்சமே! அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்ட பின்னரும், நீதான் எமக்குத் துணையாகாதது தான் எதனாலோ?

More Kurals from நெஞ்சொடுபுலத்தல்

அதிகாரம் 130: Kurals 1291 - 1300

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature