"avviya nenjaththaan aakkamum sevviyaan" Thirukkural 169 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் - ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும். (கோட்டம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது" (சிலப். 15: 91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-பொறாமை மனத்தானது செல்வமும்; செவ்வியான் கேடும்-பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும்; நினைக்கப்படும்-எக்கரணியம் பற்றி நேர்ந்தன வென்று ஆராயப்படும். இரு நிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறாயிருப்பதால் அவற்றிற்குக் கரணியம் பழவினையே என்பது ஆராய்ச்சியால் அறியப்படும். "இம்மைச் செய்தன யானறி நல்வினை யும்மைப் பயன்கொ லொருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது" என்னும் மாடலன் கூற்றும் (சிலப். 15;91-93.) "என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்தெய்வமே உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த வூனெடுத்த பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு முன் செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே". என்னும் பட்டினத்தார் பாடலும், இவ்வகை யாராய்ச்சியைக் குறிக்கும்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
பொறாமையினைக் கொண்ட மனத்தானுடைய செல்வப் பெருக்கமும், நல்ல மனமுடையவனுடைய வறுமையும், இருக்குமேயானால், ஆராய்ந்து அறிந்து கொள்ளப்படும்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
அழுக்கான நெஞ்சம் கொண்டவரின் செயல்களும், செம்மையானவரின் அழிவும் நினைக்கப் படும்.
Thirukkural in English - English Couplet:
To men of envious heart, when comes increase of joy,
Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ.
ThirukKural English Meaning - Couplet -Translation:
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.
ThiruKural Transliteration:
avviya nenjaththaan aakkamum sevviyaan
kaedum ninaikkap padum.