திருக்குறள் - 659     அதிகாரம்: 
| Adhikaram: vinaiththooimai

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

குறள் 659 - திருவள்ளுவர் - ThiruValluvar

"azhakkonda ellaam azhappoam izhappinum" Thirukkural 659 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்: அவ்வாறன்றி அறப்பகுதியில் கொண்ட பொருள்கள் இழந்தாராயினும் பின்பு பயன்படும். இது தேடினபொருள் போமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - ஒருவன், தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் - மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும். (பின் எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அழக்கொண்ட எல்லாம் அழப்போம்-ஒருவன் தீய வினைகளைச் செய்து பிறரை வருத்திப் பெற்ற செல்வ மெல்லாம் இம்மையிலேயே தான் அங்ஙனம் வருந்து மாறு தன்னை விட்டு நீங்கிப்போம்; நல் பாலவை இழப்பினும் பின் பயக்கும்-தூய வினைகளால் வந்த பொருள்களோ முன்பு இழக்கப்படினும் பின்பு வந்து பயன் தரும். தீயவழிச் செல்வம் வருவது போற் போவது மட்டு மன்றி, வந்த வகையிலேயே போமென்பதை யுணர்த்தற்கு 'அழப்போம்' என்றார். 'இழப்பினும்' ஐயவும்மை. 'பின்' என்றது இம்மைக்கும் மறுமைக்கும் பொதுவாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் தீய தொழில்களைச் செய்து பிறகு அழுது இரங்க தான் கொண்டு சென்ற போரில் எல்லாம், அவனே இரங்கி அழப் போய்விடும். தூய வழியில் சேர்த்த பொருள் முன்பு இழக்க நேரிட்டாலும் பின்பு வந்து நற்பயனைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் வறுந்தப் பெற்றதெல்லாம் தான் வறுந்தப் போகும், நல்வழியில் பெற்றதோ இழப்பினும் பிறகு நன்மை தரும்.

Thirukkural in English - English Couplet:


What's gained through tears with tears shall go;
From loss good deeds entail harvests of blessings grow.

ThirukKural English Meaning - Couplet -Translation:


All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit.

ThiruKural Transliteration:


azhakkoNda ellaam azhappoam izhappinum
piRpayakkum naRpaa lavai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore