Kural 1228

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

azhalpoalum maalaikkuth thoodhaaki aayan
kuzhalpoalum kollum padai.

🌐 English Translation

English Couplet

The shepherd's pipe is like a murderous weapon, to my ear,
For it proclaims the hour of ev'ning's fiery anguish near.

Explanation

The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

2 மணக்குடவர்

நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?. இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

ஆயன் குழல்- முன்னெல்லாம் இனிதாய் ஒலித்த இடையன் புல்லாங் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி- இதுபோது தீப் போலச் சுடும் மாலைப் பொழுதிற்கு முன் தூதாக வந்து; கொல்லும் படை- என்னைக் கொல்வது போலத் துன்புறுத்தும் படைக்கலமு மாயிற்று. முன்னரே வருகை யுணர்த்தலின் முன் தூதாயிற்று; கொல்லுந் தொழிலாற் படைக்கலமாயிற்று. தானே எரிக்கவல்ல மாலை இத்துணைக் கருவிகளையும் பெற்றால் என்னதான் செய்யா தென்பதாம். பின் னின்ற 'போலும்' உரையசை. இனி, ஆயன் குழல் போலுங் கொல்லும் படை மாலைக்குத் தூதாகி அழல் போலும் என்றுமாம்.

5 சாலமன் பாப்பையா

முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

6 கலைஞர் மு.கருணாநிதி

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.

7 சிவயோகி சிவக்குமார்

கருகச் செய்யும் மாலைக்கு தூதாகி தாக்குகிறது தேடுபவன் குழல் போன்ற கொல்லும் படை.

8 புலியூர்க் கேசிகன்

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும் படையாக வருகின்றதே!

More Kurals from பொழுதுகண்டிரங்கல்

அதிகாரம் 123: Kurals 1221 - 1230

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature