திருக்குறள் - 470     அதிகாரம்: 
| Adhikaram: therindhuseyalvakai

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

குறள் 470 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ellaadha ennich seyalvaendum thammoadu" Thirukkural 470 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான். இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும், எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க. ('தம்' என்பது ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் தம் வினைசெய்தற்கண் , தம் நிலைமையொடு பொருந்தாத ஆம்புடைகளை வேற்றரசரிடத்துக் கையாளுவாராயின் , உயர்ந்தோர் அவற்றை நல்லனவென்று ஒப்புக்கொள்ளார் ; எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆதலால் , அவ்வுயர்ந்தோர் இழிவென்று , கருதாதவற்றை எண்ணியறிந்து செய்தல் வேண்டும் . தம் நிலைமையொடு பொருந்தாத ஆம்புடைகளைச் செய்தலாவது , தாம் வலியாராயிருந்தும் மெலியார் கையாளவேண்டிய இன்சொல் கொடை பிரிப்பைக் கையாளுதலும் , மெலியாராயிருந்தும் வலியார் கையாள வேண்டிய தண்டனையைக் கையாளுதலுமாம் . இவ்விரண்டும் அரசிய லறிவிலார் செயலாதலின் , உலகு கொள்ளாதென்றார் . 'தம்' என்பது ஆகுபொருளது . எள்ளாதன செய்தலாவது இயன்றவரை தமக்கு இழிவும் இழப்பும் முயற்சியு மில்லாதவற்றைச் செய்தல் முந்தின குறளிரண்டும் ஆம்புடை செயப்படுவார் திறத்தையும் , இது அதனைச் செய்வார் திறத்தையும் பற்றியன , 'உலகு' வரையறுத்த இடவாகுபெயர் .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தொழிலினை முடிப்பதற்காக வேண்டித் தம் நிலைமைக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்வாராயின், உலகம் தம்மை இகழும். ஆதலால், இகழப்படாத வழிமுறைகளை நாடிச் செய்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறரால் இகழாதபடி சிந்தித்து செயல்பட வேண்டும் காரணம் தனக்கு பொருத்தமற்றதை ஏற்காது உலகு.

Thirukkural in English - English Couplet:


Plan and perform no work that others may despise;
What misbeseems a king the world will not approve as wise.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.

ThiruKural Transliteration:


eLLaadha eNNich seyalvaeNdum thammoadu
koLLaadha koLLaadhu ulagu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore