"ellaamai vaentuvaan enpaan enaiththondrum" Thirukkural 281 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன் யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க. இது களவு ஆகாதென்றது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
[அஃதாவது, பிறர் உடைமையாயிருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை. கருதலும் செய்தலோடு ஒத்தலின் , 'கள்ளாமை' என்றார். இல்வாழ்வார்க்கு ஆயின், தமரோடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனம் கொள்ளினும் அமையும். துறந்தார்க்கு ஆயின், அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம்ஆகலின், இது துறவறமாயிற்று. புறத்துப் போகாது மடங்கி ஒரு தலைப்பட்டு உயிரையே நோக்கற்பாலதாய அவர் மனம் , அஃது ஒழிந்து, புறத்தே போந்து பல தலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயன்றி , அது தன்னையும் வஞ்சித்துக்கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் அறிக. இவ்வாறு 'வாய்மை' முதல் 'கொல்லாமை' ஈறாய நான்கு அதிகாரத்திற்கும் ஒக்கும். பொருள் பற்றி நிகழும் குற்றத்தை விலக்குகின்ற தாகலின், இது காமம் பற்றி நிகழ்வதாய கூடா ஒழுக்கத்தின்பின் வைக்கப்பட்டது.) எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க. ('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
எள்ளாமை வேண்டுவான் என்பான் - கள்வன் என்று பிறரால் இழித்தெண்ணப் படாமையை விரும்புகின்றவன் என்று சொல்லப்படுவான் ; தன் நெஞ்சு எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க -தன்மனம் எவ்வகைப் பொருளையும் மறைவிற் கவரக் கருதாவகை காத்துக்கொள்க. அறிவு போன்ற கருத்துப் பொருளும் அடங்க 'யாதொன்றும் என்றார். நெஞ்சு கள்ளாமை காக்க என்றதனால் , கள்ளுதல் இங்குக் கள்ளக் கருதுதல் என்பது பெறப்படும். என்பான் என்னும் செய்வினை வடிவுச் சொல் செயப்பாட்டுவினைப் பொருள் கொண்டது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
பிறரால் இகழப்படாமல் இருக்கவேண்டும் என்று எண்ணுபவன் யாதொரு பொருளினையும் கள்ளத்தனத்தினால் அடையக் கூட்டிய எண்ணம் புகாதபடி தனது நெஞ்சினைக் காத்து கொள்ளுதல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
எள்ளி நகைக்கக் கூடாது என்று விரும்புபவர் எப்போதும் திருட்டுத்தனம் தோன்றாமல் காக்க வேண்டும் தன் நெஞ்சை.
Thirukkural in English - English Couplet:
Who seeks heaven's joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.
ThiruKural Transliteration:
eLLaamai vaeNtuvaan enpaan enaiththondrum
kaLLaamai kaakkadhan nenju.