திருக்குறள் - 746     அதிகாரம்: 
| Adhikaram: aran

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

குறள் 746 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ellaap porulum udaiththaai idaththudhavum" Thirukkural 746 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லாப் பொருள்களையும் உடைத்தாய், உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண். எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது. (அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லாப் பொருளும் உடைத்தாய்- அரசனும் படைமறவரும் குடிகளுமாகிய அகத்தாரெல்லார்க்கும் வேண்டிய பொருள்களை யெல்லாம் உள்ளே கொண்டதாய்; இடத்து உதவும் நல் ஆள் உடையது- நொச்சிமறவர் புண்பட்டும் மடிந்தும் விழவிழ உடனுடன் அவர் நின்ற இடத்திற்கு வந்து பொருதுதவும் நன்மறவரை யுடையதே; அரண்-சிறந்த கோட்டையரணாவது. அரசப்பத்தியும் நாட்டுப்பற்றும் மறமும் மானமும் ஊக்கமும் ஒருங்கேயுடைய மறவரை 'நல்லாள்' என்றார். எல்லாப் பொருளுமுடைமையால் நெடுநாள் முற்றுகையைத் தாங்குதலும், இடத்துதவும் நல்லாளுடைமையால் தோல்வியுறாது வெற்றுபெறுதலும், கூடுமென்பது கருத்து.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தேவைகளை தீர்க்கும் எல்லா பொருளும் உள்ளடக்கியதாகவும், நல்ல ஆட்களை கொண்டதாகவும் இருப்பது அரண்.

Thirukkural in English - English Couplet:


A fort, with all munitions amply stored,
In time of need should good reserves afford.

ThirukKural English Meaning - Couplet -Translation:


A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).

ThiruKural Transliteration:


ellaap poruLum udaiththaai idaththudhavum
nallaaL udaiyadhu araN.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore