எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண்.
Transliteration
enaimaatchith thaakiyak kaNNum vinaimaatchi
illaarkaN illadhu araN.
🌐 English Translation
English Couplet
Howe'er majestic castled walls may rise,
To craven souls no fortress strength supplies.
Explanation
Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.
2 மணக்குடவர்
சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும் வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை. இது வினைவல்லாரும் வேண்டு மென்றது.
3 பரிமேலழகர்
அரண் - அரண்; எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் - மேற்சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாயவிடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம். (வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அரண்-கோட்டையரணமைப்பு; எனை மாட்சித்து ஆகியக் கண்ணும்; மேற்சொல்லப்பட்ட வுறுப்புக்களெல்லா வற்றோடுங்கூடி எத்துணை மாட்சிமைப் பட்டதாயிருப்பினும்; வினைமாட்சி இல்லார் கண் இல்லது-போர்வினைச் சிறப்பில்லாதவரிடத்துப் பயன்படாததாம். வினைமாட்சியாவது வெற்றிக்கேதுவான பல்வேறு வினைத்திறமை. வினைமாட்சியின்மை கூறவே, குறைவினையோடு வினையின்மையும் மிகைவினையும் தகாவினையும் கடியப்பட்டனவாம். இருந்தும் பயன்படாமை அல்லது பயன்படுத்தப்படாமை இல்லாமையோ டொக்குமாதலின், 'இல்லதரண்' என்றார். உம்மை உயர்வு சிறப்பு. இவ்விரு குறளாலும் வினைமாட்சியின்றி அரண்மாட்சி பயன்படாமை கூறப்பட்டது. 'இல்லையரண்' என்பது மணக்குடவர் கொண்ட பாடம்.
5 சாலமன் பாப்பையா
எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.
7 சிவயோகி சிவக்குமார்
எவ்வளவு சிறப்புப் பெற்றதாக இருப்பினும் செயல் திறன் இல்லாதவர் இடத்தில் பயன் அற்றதாகும் அரண்.
More Kurals from அரண்
அதிகாரம் 75: Kurals 741 - 750