திருக்குறள் - 317     அதிகாரம்: 
| Adhikaram: innaaseyyaamai

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

குறள் 317 - திருவள்ளுவர் - ThiruValluvar

"enaiththaanum egngnaandrum yaarkkum manaththaanaam" Thirukkural 317 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகினற் இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். (ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தான் ஆம் மாணா- மனத்தோடு கூடிய தீய செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை- எக்காலத்தும் எவர்க்கும் எத்துணைச் சிறிதும் செய்யா திருத்தல் தலைமையான அறமாம். மனத்தோடு கூடிய செயலாவது அறிந்து செய்யுஞ் செயல். மாணுதல் நன்றாதல். 'மாணா' பலவின் பால் எதிர்மறை விணையாலணையும் பெயர். வலிமையுள்ள காலத்தையும் உட்படுத்த 'எஞ்ஞான்றும்' என்றும் எளியாரையும் விலக்க 'யார்க்கும்' என்றும் "சிறு பொறி பெருந்தீ" யாதலானும் சிறுநஞ்சும் பெருந்தீங்கு செய்தலானும் சிறுவினையும் தீயது தீவினையே என்று கருதி எனைத்தானும் என்றும் கூறினார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தோடு பொருந்திய துன்பம் தரும் செயல்களை எக்காலத்திலும், யார்க்கும் சிறிதேயாயினும் செய்யாதிருத்தல் தலையான அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எதன்பொருட்டும் எப்பொழுதும் யாருக்கும் மனத்தளவிலும் பகை உணர்வுக் கொல்லாமையே தலை சிறந்தது.

Thirukkural in English - English Couplet:


To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue's highest praise.

ThirukKural English Meaning - Couplet -Translation:


It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time

ThiruKural Transliteration:


enaiththaanum eGnGnaandrum yaarkkum manaththaanaam
maaNaasey yaamai thalai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore